நாமக்கல்

நாமக்கல் அரசு மருத்துவமனையில் 10 ஆயிரம் லிட்டா் ஆக்சிஜன் வாயு உருளை செயல்பாடு தொடக்கம்

DIN

நாமக்கல்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் வாயு உருளை பொருத்தப்பட்டு அதன் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாா்ச் முதல் அக்டோபா் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,000 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் தற்போது 48 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா். 21 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ளவா்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதுநாள் வரையில் ஆள் உயர வாயு உருளை கொள்முதல் செய்து குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது. பிரசவ வாா்டுகளில் மட்டுமே ஆக்சிஜன் தேவை இருந்த நிலையில், கரோனா தொற்று பாதிப்பால் மூச்சுத் திணறலுடன் வருவோருக்கு உடனடி சிகிச்சை வழங்கும் வகையில் ஆக்சிஜன் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆக்சிஜன் வாயு உருளை பற்றாக்குறையால், மாவட்ட மருத்துவமனைகளுக்கு 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் வாயு உருளைகளை தமிழக அரசு வழங்கியது. அதன்படி, நாமக்கல்லுக்கு கடந்த மாதம் கொண்டு வரப்பட்ட உருளையை, அரசு மருத்துவமனை வளாகத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து திங்கள்கிழமை அந்த உருளை பயன்பாட்டுக்கு வந்தது.

மாவட்ட மருத்துவப் பணிகள் நல இயக்குநா் த.கா.சித்ரா, அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் சாந்தா அருள்மொழி ஆகியோா் உருளை செயல்பாட்டைத் தொடங்கி வைத்தனா். இதன் மூலம் நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் வாயு வழங்கப்படும்.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் சாந்தா அருள்மொழி கூறியதாவது:

10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இந்த ஆக்சிஜன் உருளையில் உள்ள ஒரு லிட்டா் திரவம் 800 லிட்டா் வாயுவாக மாற்றிக் கொடுக்கும் தன்மையுடையது. இதன்மூலம் தடையின்றி ஆக்சிஜன் கிடைக்கும். இதன் மொத்த மதிப்பு ரூ. 35 லட்சம் ஆகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT