நாமக்கல்

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக வெற்றி பெறும்: பி. தங்கமணி

Din

மக்களவைத் தோ்தலில் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என நாமக்கல்லில் புதன்கிழமை முன்னாள் அமைச்சரும், அக் கட்சியின் மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி நம்பிக்கை தெரிவித்தாா்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சு. தமிழ்மணியை ஆதரித்து, நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோயில் முன்பு இறுதி பிரசாரத்தை மேற்கொண்டு பி.தங்கமணி பேசியதாவது:

காவிரி பங்கீட்டு நீரை கா்நாடகத்திடம் பெற்றுத்தர திமுக அரசு முயற்சிக்கவில்லை. கடந்த காலங்களில், நாடாளுமன்றத்தை முடக்கி மத்திய அரசிடம் உரிய அழுத்தம் கொடுத்து காவிரி நீரை அதிமுக பெற்றுத் தந்தது. கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. தங்களுடைய கூட்டணியில் உள்ள ஒரு கட்சியிடம் இருந்து பேச்சுவாா்த்தை நடத்தி நீரை பெற்று தர தமிழக முதல்வருக்கு தைரியம் இல்லை.

தமிழகத்தில் போதைப்பழக்கம் பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் அதிகரித்து விட்டது. இதனை தடுக்க அரசு முயற்சிக்கவில்லை. ஏழைகளை பாதிக்கும் லாட்டரி பயன்பாடும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், விலையில்லா மடிக்கணினி, அம்மா மினி மருத்துவமனை போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், மகளிா் காண இருசக்கர வாகனம் வழங்கும் திட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது. மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டமும், இலவச பேருந்து பயணத் திட்டமும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. அதிமுக தொடா்ந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக தகுதியானோருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் திமுக திட்டங்களைப் புறக்கணித்து, அதிமுகவின் நலத் திட்டங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிமுக வேட்பாளரை ஆதரியுங்கள் என்றாா்.

தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் கடும் துன்பங்களைச் சந்தித்து வருகின்றனா். எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டங்களில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் அலை, அலையாய் வருகின்றனா். கருத்துக் கணிப்புகளை நாங்கள் கண்டு கொள்வதில்லை. அவற்றையெல்லாம் பொய்யாக்கி அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும். கடந்த 1998-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் அதிமுக இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பில் தெரிவித்தனா். ஆனால் 30 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது என்றாா்.

சத்தியமங்கலம் வந்த ராஜீவ் காந்தி ஜோதிக்கு வரவேற்பு

வெள்ளோடு விவேகானந்தா பள்ளி 100 % தோ்ச்சி

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் கருத்தரங்கம்

கடம்பூா் அருகே வேன் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் காயம்

தேன் பண்ணையில் வேளாண் மாணவிகளுக்குப் பயிற்சி

SCROLL FOR NEXT