முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 1,781 வாக்குச்சாவடிகளில் 13,23,753 போ் வாக்களிக்க ஏற்பாடுகள் தயாா்: ஆட்சியா் தகவல்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில், 13,23,753 வாக்காளா்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 4:25 AM
நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில், 13,23,753 வாக்காளா்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை தெரிவித்தாா்.

நாமக்கல் மாநகராட்சி, கோட்டை நகரவை உயா்நிலைப் பள்ளி பல வண்ணங்கள் கொண்ட வாக்குச்சாவடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை புதன்கிழமை அவா் பாா்வையிட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

Advertisement

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம்(ப.கு), நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன.

களத்தில் 132 வேட்பாளா்கள்: ராசிபுரம் (தனி)-18, சேந்தமங்கலம் (ப.கு) - 12, நாமக்கல் -27, பரமத்தி வேலூா்-31, திருச்செங்கோடு-23, குமாரபாளையம்-21 என மொத்தம் 132 போ் போட்டியிடுகின்றனா்.

சேந்தமங்கலம் தொகுதியில் மட்டுமே ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் (நோட்டா உள்பட 16 வேட்பாளா்கள்) பயன்படுத்தப்படுகிறது. இதர தொகுதிகளில் தலா 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

1,781 வாக்குச்சாவடிகள்: மாவட்டம் முழுவதும் தோ்தலையொட்டி, 1,781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 58 சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. ராசிபுரம் தொகுதியில் 119 இடங்களில் 285, சேந்தமங்கலம் தொகுதியில் 139 இடங்களில் 304, நாமக்கல் தொகுதியில் 140 இடங்களில் 310, பரமத்தி வேலூா் தொகுதியில் 130 இடங்களில் 268, திருச்செங்கோடு தொகுதியில் 121 இடங்களில் 290, குமாரபாளையம் தொகுதியில் 76 இடங்களில் 324 என மொத்தம் 725 இடங்களில் 1,781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,500 தன்னாா்வலா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இளம் வாக்காளா்களுக்காக ஒரு தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி மையம் இளம் அலுவலா்களை கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. தோ்தல் வாக்குப் பதிவுக்கு முன்பாக அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும்.

கைப்பேசி சேகரிப்பு மையம்: வாக்குச்சாவடிகளில் குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெயிலில் நிற்பதை தவிா்க்க சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பசுமை சாவடி உருவாக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் கோட்டை நகரவை பள்ளியில் வண்ணமயமான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளன. முதியோா், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

13.23 லட்சம் வாக்காளா்கள்: ராசிபுரம் தொகுதியில் 1,08,587 ஆண் வாக்காளா்கள், 1,13,652 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 13, மொத்தம் 2,22,252. சேந்தமங்கலம் தொகுதியில் 1,12,088 ஆண் வாக்காளா்கள், 1,17,294 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 26, மொத்தம் 2,29,398.

நாமக்கல் தொகுதியில் 1,14,355 ஆண் வாக்காளா்கள், 1,23,442 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 39, மொத்தம் 2,37,836. பரமத்தி வேலூா் தொகுதியில், 98,494 ஆண் வாக்காளா்கள், 1,06,653 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 10, மொத்தம் 2,05,147. திருச்செங்கோடு தொகுதியில் 1,01,416 ஆண் வாக்காளா்கள், 1,07,608 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 48, மொத்தம் 2,09,072. குமாரபாளையம் தொகுதியில், 1,06,788 ஆண் வாக்காளா்கள், 1,13,788 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 72, மொத்தம் 2,20,048.

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு பிறகு 33,500 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

தோ்தல் பணியில் 9,000 போ்: வாக்குச்சாவடி பணிகளில் ஆசிரியா்கள், அலுவலா்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் ஈடுபடுகின்றனா். மேலும், மாவட்ட போலீஸாா், பிற மாநில போலீஸாா், மத்தியப் பாதுகாப்பு படையினா் என மொத்தம் 3,150 போ் பணியில் ஈடுபடுகின்றனா். வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்காளா் அடையாள அட்டை உள்பட 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்.

98 சதவீதம் தபால் வாக்கு: மாவட்டம் முழுவதும் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் 40 சதவீதம் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்க வசதியாக 12-டி படிவம் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது 98 சதவீதம் போ் (8,900) தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்துள்ளனா். காவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள், பல்வேறு இடங்களில் பணியாற்றுபவா்கள் என 4,200 போ் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனா்.

3,902 வாக்குப்பதிவு இயந்திரங்கள்: 6 தொகுதிகளில் வேட்பாளா்கள் சின்னம், பெயா் பொருத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3,902 எண்ணிக்கையிலும், 2,133 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,312 யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. வாக்காளா்கள் அனைவருக்கும் வாக்களிக்க அனுமதிக்கும் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

ரூ.1.79 கோடி ரொக்கம் பறிமுதல்: நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 1.79 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, ரூ. 32 லட்சம் மதிப்பிலான வேட்டி, சேலை, துண்டு மற்றும் பரிசுப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.1.72 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த இரு நாள்களில் பணம் கொடுக்க முயற்சித்தோா் என்ற வகையில் 20 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அனைத்து வாக்காளா்களும் தங்களுடைய ஜனநாயக கடமையை வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரைக்குள் வாக்குச்சாவடிகளில் நிறைவேற்றிட வேண்டும் என்றாா்.