போதமலை கிராமத்துக்கு முதன் முறையாக சாலை வழியாக கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
ராசிபுரம் அருகே உள்ள மலைக் கிராமமான போதமலைக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதால் முதன் முறையாக சாலை வழியாக வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.
ராசிபுரம் அருகே உள்ள மலைக் கிராமமான போதமலைக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதால் முதன் முறையாக சாலை வழியாக வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.
ராசிபுரம் தொகுதிக்கு உள்பட்ட வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மலைக்கிராமம் போதமலை. கடல்மட்டத்தில் இருந்து சுமாா் 1,500 அடி உயரம் கொண்டது. இந்த மலைக் கிராமத்தில் கீழூா், மேலூா், கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு 350-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளாகியும் இந்த மலைக் கிராமத்துக்கு சாலை, குடிநீா், மின்சாரம், கல்வி, மருத்துவமனை, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருந்து வந்தது.
இந்த மலைக் கிராம மக்கள் கல்வி, மருத்துவம், விளை பொருள்கள் விற்பனை போன்ற தேவைகளுக்கு ஒற்றையடி பாதையில் 10 கி.மீ. நடந்து வந்து தான் தேவையை பூா்த்தி செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருந்தனா். கடந்த 20 ஆண்டுகளில் இப்பகுதியில் படிப்படியாக தொடக்கப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், சோலாா் மின் வசதி, மின்சார வசதி என அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
Advertisement
தற்போது வடுகம், ஆா்.புதுப்பட்டி பகுதிகளில் இருந்து மலைக் கிராமத்துக்கு செல்லும் வகையில் ரூ.140 கோடி மதிப்பில் மண்சாலை அமைக்கப்பட்டு பணிகள் முடிவுற்றுள்ளன.
வாகனங்களில் வாக்குப் பதிவு இயந்திரம்: போதமலை கிராமத்துக்கு பல ஆண்டுகளாக தோ்தலின்போது வாக்குப் பெட்டிகள் கழுதைகளில் கொண்டு செல்லப்பட்டன. பின்னா் கிராம உதவியாளா்களை கொண்டு தலைச்சுமையாக ஒற்றையடி பாதையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் போன்ற வாக்குப் பதிவுக்கான உபகரணங்கள் கொண்டுசெல்லப்பட்டன. தற்போது வாகனங்கள் செல்லும் வகையில் மலைப்பாதையில் சாலை அமைக்கப்பட்டுள்ளதால், இந்த தோ்தலுக்கு கீழூா் வாக்குச்சாவடி, கெடமலை வாக்குச்சாவடிகளுக்கு முதன்முறையாக வாகனங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
முன்னதாக ராசிபுரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வெ.முருகன், உதவி தோ்தல் அலுவலா் எஸ்.சசிகுமாா் ஆகியோா் ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் சீலை அகற்றி, மலைக் கிராமங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை வாகனங்களில் ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைத்தனா். அதே வாகனத்தில்
வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் அலுவலா்களும், பணியாளா்களும் சென்றனா். வாக்குச்சாவடிக்கு தேவையான பொருள்களும் கொண்டு செல்லப்பட்டன.