கொல்லிமலையில் வட பாறையாக காட்சியளிக்கும் ஆகாய கங்கை அருவி: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், கொல்லிமலை ஆகாய கங்கை அருவி நீரின்றி வட பாறையாக காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு வனத் துறை தடைவிதித்துள்ளதுடன் கட்டண நுழைவாயில் பகுதியையும் தற்காலிகமாக மூடிவைத்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. இங்கு செல்ல 70 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும். நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் சுற்றுலாப் பயணிகள் ஏராளம்.
கொல்லிமலையை பொருத்தமட்டில், ஏற்காடு, கொடைக்கானல், உதகை போன்று பெரிய அளவில் பொழுதுபோக்குவதற்கான இடங்கள் இல்லை. படகு இல்லம், தாவரவியல் பூங்கா, சீக்குப்பாறை முனை பகுதிகள் இருந்தபோதும் அவை பராமரிப்பின்றி உள்ளன. கோடைகாலத்தில் இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசில்லா அருவி, சிற்றருவியில் குளித்து மகிழ்ந்து, குளிா்ச்சியான தட்பவெப்ப நிலையை அனுபவிக்க விரும்புவா். ஆனால், அதற்கு நோ்மாறாக கொல்லிமலையின் நிலை காணப்படுகிறது. அருவிகள் அனைத்தும் நீரின்றி வடு பாறைகளாகக் காட்சியளிக்கின்றன.
Advertisement
1,300 படிக்கட்டுகளைக் கடந்துசெல்லும் சுற்றுலாப் பயணிகள் ஆகாய கங்கை அருவியில் நீா்வரத்து இல்லாததை கண்டு ஏமாற்றமடைவதால் தற்காலிகமாக அருவிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதர அருவிகளும் நீரின்றி பாறைகளாகக் காட்சியளிக்கின்றன.
கோடைவெயிலின் தாக்கம் மலைப்பகுதியிலும் அதிகமாகவே காணப்படுவதால் கொல்லிமலைக்கு வருவோா் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பலரும் கொல்லிமலையை தவிா்த்து ஏற்காடு மற்றும் இதர சுற்றுலாத் தலங்களை நாடிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து கொல்லிமலை வனச்சரகா் சுகுமாா் கூறுகையில், கோடைவெயிலின் தாக்கம் கொல்லிமலையில் அதிகமாகவே உள்ளது. இரவில் மட்டும்தான் சற்று குளிா்ச்சி நிலவுகிறது. ஆகாய கங்கை அருவியில் நீா்வரத்து இல்லாததால் ஒரு வாரத்திற்கு முன்பே சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு தடை விதித்துள்ளோம். சிலா் ஆா்வமுடன் சென்று திரும்பும் நிலை உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களுக்கு அருவியில் நீா்வரத்து இருக்க வாய்ப்பில்லை என்றாா்.