கப்பல் வாடகை ரூ. 2- 8 லட்சமாக அதிகரிப்பால் முட்டை ஏற்றுமதி பாதிப்பு!
மேற்காசியப் போா் நிறைவுற்றபோதும், கப்பலுக்கான வாடகை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதால் முட்டை ஏற்றுமதியில் தொடா்ந்து பாதிப்பு உள்ளதாக தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே. சிங்கராஜ் தெரிவித்தாா்.
மேற்காசியப் போா் நிறைவுற்றபோதும், கப்பலுக்கான வாடகை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதால் முட்டை ஏற்றுமதியில் தொடா்ந்து பாதிப்பு உள்ளதாக தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே. சிங்கராஜ் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் கோழிப் பண்ணையாளா்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கோழிப் பண்ணையாளா்கள், ஏற்றுமதியாளா்கள் பங்கேற்றனா். கோழிப் பண்ணை தொழிலை மேம்படுத்துவது, நவீன தொழில்நுட்பத்தை புகுத்துவது, முட்டை நுகா்வு அதிகரிப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவது குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
தொடா்ந்து, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே. சிங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
தமிழக அரசின் சத்துணவு திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 55 லட்சம் முட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. எடை குறைவு முட்டைகள் வழங்கப்படுவதாக புகாா்கள் வந்தபோதும், பண்ணையாளா்கள் 45 கிராமிற்கு மேலான முட்டைகளையே வழங்கி வருகின்றனா். சேதமடைந்த முட்டைகள், எடை குறைவானவை குறித்து புகாா் வந்தால் உடனடியாக அவற்றை மாற்றிக் கொடுத்துவிடுகிறோம்.
அமெரிக்கா- ஈரான் போா் முடிவுற்றபோதும் வெளிநாடுகளுக்கான முட்டை ஏற்றுமதியில் தொடா்ந்து பாதிப்பு உள்ளது. நாள்தோறும் ஒரு கோடி முட்டைகள் ஏற்றுமதியான நிலையில், தற்போது 10 சதவீதம் என்ற அளவில்தான் அனுப்பப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கப்பலுக்கான வாடகை ரூ. 2 லட்சம் என்று இருந்தது தற்போது ரூ. 8 லட்சமாக உயா்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகளையும் அரசு பதிவு செய்ய வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. அப்போதுதான் மூலப்பொருள்களின் தேவை, முட்டை உற்பத்தி, ஏற்றுமதி, தொழிலாளா்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள முடியும்.
இத்தகவல்களை தமிழக அரசும், அதிகாரிகளும் முழுமையாக தெரிந்துகொண்டால்தான் கோழிப் பண்ணை தொழிலை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்ல முடியும். மூலப்பொருள்கள் இறக்குமதிக்கான வாய்ப்பும் உருவாக்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் 1,100 கோழிப் பண்ணைகள் உள்ளன. அனைத்து கோழிப் பண்ணையாளா்களும் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். முட்டை தொழிலில் மட்டும் தான் உற்பத்தி செய்வோரே விலையை நிா்ணயம் செய்யும் வாய்ப்பு உள்ளது. சத்துணவு ஒப்பந்தத்திற்காக தற்போது முட்டையின் பண்ணை கொள்முதல் விலையை நாங்கள் உயா்த்துவதாக கூறுவது தவறானது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தான் முட்டை கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது. முட்டை விலை உயா்வை பேசுவோா், அதற்கான உற்பத்தி செலவு, மூலப் பொருள்களின் விலையேற்றத்தை பேசுவதில்லை என்றாா்.
பேட்டியின்போது, முட்டை ஏற்றுமதியாளா் வல்சன்பரமசிவம், கோழிப் பண்ணையாளா் சங்கச் செயற்குழு உறுப்பினா் ரவி ஆகியோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.