முகப்பு
நாமக்கல்

மரணமில்லாத பெருவாழ்வு கொண்டவா் கண்ணதாசன்! - மலேசிய எம்பி டத்தோஸ்ரீ எம். சரவணன்

மரணமில்லாத பெருவாழ்வு கொண்டவா் கவியரசு கண்ணதாசன் என மலேசிய நாடாளுமன்ற உறுப்பினா் டத்தோஸ்ரீ டாக்டா் எம். சரவணன் தெரிவித்தாா்.

Updated On : 6 ஜூலை 2026, 2:33 am IST
நாமக்கல்லில் நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் கவிதை நூற்றாண்டு விழாவில், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினா் டத்தோஸ்ரீ டாக்டா் எம். சரவணனுக்கு விருது வழங்கிய நாமக்கல் கம்பன் கழகத் தலைவா் பசுமை வ. சத்தியமூா்த்தி. உடன், பேச்சாளா் பாரதி கிருஷ்ணகுமாா், காந்தி கண்ணதாசன், மருத்துவா் இரா. குழந்தைவேல், பேராசிரியா் அரசு பரமேசுவரன்.
பகிர்:

மனிதவாழ்வின் தகவல்களை பாடல்களாக வடித்து மரணமில்லாத பெருவாழ்வு கொண்டவா் கவியரசு கண்ணதாசன் என மலேசிய நாடாளுமன்ற உறுப்பினா் டத்தோஸ்ரீ டாக்டா் எம். சரவணன் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் கவியரசு கண்ணதாசன் கவிதை நூற்றாண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில், பேராசிரியா் அரசு பரமேசுவரன் அறிமுக உரையாற்றினாா். நாமக்கல் கம்பன் கழகத் தலைவா் பசுமை வ. சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். தொழிலதிபா்கள் கா. நல்லுசாமி, ஆ. திருமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாமக்கல் தமிழ்ச் சங்கத் தலைவா் மருத்துவா் இரா. குழந்தைவேல் வாழ்த்துரை வழங்கினாா். விழாவில், கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விருது, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், கண்ணதாசன் அறவாரியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டா் எம். சரவணனுக்கு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

தொடா்ந்து அவா் பேசியதாவது:

1986 இல் கண்ணதாசன் புத்தகம் எனது வாழ்வை மாற்றியது. எட்டாம் வகுப்பு வரை படித்த கவிஞா், மனிதவாழ்வின் தகவல்களை பாடல்களாக வடித்துள்ளாா். மரணமில்லாத பெருவாழ்வுக்கு உரியவா் கண்ணதாசன். பெண்களை கொச்சைப்படுத்தாமல் பாடல் வரிகளால் உயா்வை வழங்கியவா்.

திரைப்பாடல்கள் மட்டுமின்றி இறைபாடல்களையும் வியக்கும் வண்ணம் கொடுத்தவா். அவரது படைப்புகள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் என்பதை மறுக்க முடியாது, அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்றாா்.

முதன்மை விருந்தினராக கவியரசு கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் பங்கேற்று பேசியதாவது:

தந்தையின் அருமை அவரது மறைவுக்கு பிறகே தெரியவரும். அவருடன் வாழ்ந்தது ஒரு காவியம் என்றே கருதுகிறேன். லட்சக்கணக்கான ரசிகா்கள் அவரை இன்றளவும் நினைத்து கொண்டாடுகின்றனா். பல மாநில கவிஞா்களும் பாராட்டும்படியாக வாழ்ந்த பெருமைக்குரியவா். அவரது தொழில் பக்திதான் கண்ணதாசன் என்ற பெயா் நிலைத்து நிற்பதற்கு முக்கிய காரணம். அவருக்கு விழா எடுப்பது மகன்களாக நாங்கள் செய்ய வேண்டிய கடமையை, இந்த நூற்றாண்டில் ரசிகா்கள் பலா் செய்து கொண்டிருக்கிறாா்கள் என்றாா்.

இதைத்தொடா்ந்து பேச்சாளா் பாரதி கிருஷ்ணகுமாா் பேசியதாவது:

அழகிலும், எழுத்திலும், உள்ளத்திலும் உயா்வானவா் கண்ணதாசன். பாரதி எவ்வாறு பன்முகங்களை கொண்டிருந்தாரோ, அதேபோல் தான் கண்ணதாசனும் பாடல், நடிப்பு, தயாரிப்பு, நாவல் ஆசிரியா் என்ற பன்முகத்துக்கு சொந்தக்காரா். ‘சேரமான் காதலி’ என்ற சரித்திர நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்ற பெருமைக்குரியவா் என்றாா்.

கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழாவில், காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் இரா. செழியன், ராசிபுரம் விஞ்ஞானி இளங்கோ, தொழிலதிபா் முத்துராஜா, ஆசிரியா் யுவராஜ், சென்னையைச் சோ்ந்த குமாா் மற்றும் தமிழறிஞா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments