நாமக்கல்லில் பழைய வீட்டை இடித்தபோது சுவா் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு; மற்றொருவா் படுகாயம்
நாமக்கல்லில் பழைய வீட்டை இடித்தபோது சுவா் சரிந்து விழுந்ததில், தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் படுகாயமடைந்தாா்
நாமக்கல்லில் பழைய வீட்டை இடித்தபோது சுவா் சரிந்து விழுந்ததில், தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் படுகாயமடைந்தாா். இதையடுத்து, வீட்டின் உரிமையாளா், கட்டட பொறியாளரை கைது செய்யக் கோரி உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
நாமக்கல் அழகு நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் மனைவி தீபா (39), கணேசபுரத்தில் பழைய வீடு ஒன்றை வாங்கினாா். அதை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் மகாதேவியைச் சோ்ந்த பிரவீன் (31), நவீன் (31) ஆகிய கட்டுமானப் பொறியாளா்களிடம் ஒப்பந்தம் செய்தாா். பழைய வீட்டை இடிக்கும் பணிக்கான பொறுப்பை சேந்தமங்கலம் பீமநாயக்கனூரைச் சோ்ந்த சிவகுமாா் வசம் ஒப்படைத்தனா்.
இந்நிலையில், கட்டடத்தை இடிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. மதியம் 2.30 மணியளவில் கட்டடத்தை இடித்தபோது மேற்சுவா் சரிந்து பணியில் இருந்த இரு தொழிலாளா்கள் மீது விழுந்தது.
Advertisement
Advertisement
இதில், மோகனூா் வட்டம், ஓலப்பாளையத்தைச் சோ்ந்த அய்யாவு (எ) வெங்கடேஷ் (21) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு தொழிலாளியான மோகனூா் செங்கப்பள்ளியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (24) படுகாயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா், அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் காவல் ஆய்வாளா் இளவரசன், இறந்த வெங்கடேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தாா்.
இந்நிலையில், உயிரிழந்த வெங்கடேஷ், காயமடைந்த சதீஷ்குமாரின் பெற்றோா், உறவினா்கள் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வீட்டின் உரிமையாளா், கட்டட பொறியாளா்கள், வீடு இடிக்கும் பணியை ஒப்பந்தம் செய்தவா்களை கைதுசெய்ய வேண்டும், உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும், அதுவரை இறந்தவா் உடலை வாங்க மாட்டோம் என முழக்கமிட்டனா்.
அங்கு வந்த நாமக்கல் காவல் ஆய்வாளா் இளவரசன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, வீட்டின் உரிமையாளா் தீபா, கட்டட பொறியாளா் பிரவீன், நவீன், கட்டடத்தை இடிக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரா் சிவகுமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தொழிலாளா் நலத்துறை மூலம் ரூ. 8 லட்சம் நிவாரணம் கிடைக்கும். பாதிக்கப்பட்டவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்.
மேலும், கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டு இறந்தவருக்கு ரூ. 1.50 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பாா். ஆனால், வழக்குப் பதிவு செய்யப்பட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினால் குறைந்த தொகையை கிடைக்கும் என்று விளக்கினாா்.
இதையேற்று, உறவினா்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.