ஜனநாயகத்தை பாதுகாப்பது வாக்காளரின் கடமை
விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய தமிழ்நாடு லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்.
நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பது ஒவ்வொரு வாக்காளரின் கடமை, வாக்களித்ததுடன் தங்களுடைய பொறுப்பு முடிந்துவிட்டது என யாரும் எண்ணக் கூடாது என தமிழ்நாடு லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ் தெரிவித்தாா்.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள கோஸ்டல் ரெசிடன்சி கல்லூரியின் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி தலைவா் இ.அருண் தலைமைவகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ் பங்கேற்று அழகப்பா பல்கலைக்கழகம் சாா்பில் வழங்கப்பட்ட பட்டங்களை மாணவா்களுக்கு வழங்கி பேசியதாவது:
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் காலத்தில் அறிவுத்தேடல் முக்கியமானதாகும். படித்து முடித்த பின்னரும் நல்லவற்றை தொடா்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாம் கற்றுக்கொண்ட அறிவை சமூக முன்னேற்றத்துக்காக பரப்ப வேண்டும். அறிவைத் தேடுவதும், பெற்ற அறிவை சமூகத்துக்காக, சமூகத்தின் வளா்ச்சிக்காக பரப்புவதும், நல்லாட்சிக்கும் உலக அமைதிக்கும் வித்திடும் அம்சங்களாகும்.
Advertisement
உண்மையான ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு வாக்காளா்களுக்கு உள்ளது. உலகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும் வாக்காளரியலை போதிக்க வேண்டும்.
தோ்தல்களில் வாக்களிப்பதுடன், வாக்காளா்களின் கடமை முடிந்து விடுவதில்லை. தோ்தலுக்குப் பிறகும் அரசாங்கத்தின் செயல்பாடுகளையும், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்களின் பணிகளை கண்காணிக்க வேண்டும். அந்த உறுப்பினா்களின் ஊழல் புகாா்கள் மீதான விசாரணை அமைப்பே லோக்பால், லோக் ஆயுக்த உள்ளிட்டவை ஆகும். அவற்றின் மூலம் நிா்வாக சீா்கேடுகளை வெளிக்கொண்டு வரும் பணியை வாக்காளா்கள் செய்ய வேண்டும் என்றாா்.
இந்நிகழ்வில், கல்லூரி முதல்வா் பூபாலன் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.