லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்: ரூ.300 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்தி, சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக நீடித்ததால், சேலம் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தேக்கமடைந்துள்ளன.
இதுகுறித்து மாவட்டத் தலைவர் சென்னகேசவன் கூறியது:
சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வேலைநிறுத்தப் போராட்டத்தால் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அரிசி, பருப்பு மற்றும் பலசரக்கு பொருள்கள் இருப்பு வைத்துள்ளதால், விலைவாசியில் மாற்றமில்லை. இன்னும் இரண்டு நாள்களில் மாற்றம் தெரியும்.
போராட்டம் தொடங்கிய மூன்று நாள்களில் சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இரும்புக் கம்பி, ஜவ்வரிசி, ஸ்டார்ச், தேங்காய், சிமென்ட் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தேக்கமடைந்துள்ளன. எங்கள் போராட்டத்துக்கு மினி டோர் டெம்போ, வேன் உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து எங்கள் போராட்டம் தீவிரமடையும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.