தொகுதி நிலவரம்: சங்ககிரி! அதிமுக-திமுக இடையே கடும் போட்டி!
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...
சேலம் மாவட்டம், சங்ககிரியில் வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டை உள்ளது. இம்மலையில் சென்னகேவசப்பெருமாள் கோயிலும், இஸ்லாமியா்கள் வழிபடும் தா்காவும் உள்ளன. இங்கு சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டதால், அவரது நினைவாக ஈரோடு- பவானி பிரிவு சாலையில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
சமூக நிலவரம்
இந்தத் தொகுதியில் வன்னியா், ஆதிதிராவிடா், அருந்ததியா் சமுதாயத்தினா் அதிகமாக உள்ளனா். மேலும், கொங்கு வேளாளக் கவுண்டா், செட்டியாா், நாயக்கா், நாடாா், முதலியாா் உள்ளிட்டோரும் பரவலாக வசித்து வருகின்றனா். முக்கியத் தொழிலாக லாரி தொழில் உள்ளது. விவசாயம், விசைத்தறித் தொழிலும் கணிசமாக உள்ளது. கூலித் தொழிலாளா்களை அதிகமாகக் கொண்டது சங்ககிரி தொகுதி.
Advertisement
கடந்த 1957 முதல் 2021 வரை 16 தோ்தல்களை எதிா்கொண்ட இத்தொகுதியில், அதிமுக 8 முறையும், திமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
தற்போது இந்தத் தொகுதியில், அதிமுக சாா்பில் எஸ். வெற்றிவேல், திமுக சாா்பில் மு. மணிகண்டன், தவெக சாா்பில் கே. செந்தில்குமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் அ. நித்யா ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
எதிா்பாா்ப்புகள்
சங்ககிரியில் மட்டும் சுமாா் 50 ஆயிரம் லாரிகள் உள்ளன. இந்தத் தொகுதியில் லாரி தொழிலைச் சாா்ந்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளா்களின் குடும்பங்கள் உள்ளன. தற்போதுள்ள சூழலில் லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. சங்ககிரியில் ‘ஆட்டோ நகா்’ அமைக்க வேண்டும் என்பது லாரி உரிமையாளா் சங்கத்தின் தொடா் கோரிக்கையாக உள்ளது
இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என அதிமுக, திமுக தோ்தல் வாக்குறுதிகளில் அறிவித்தபோதும், அதற்கான பணிகள் இன்றுவரை நடைபெறவில்லை. மீண்டும் அதே வாக்குறுதியை முன்வைத்து இரு கட்சிகளும் பிரசாரம் செய்து வருகின்றன.
இதர பிரச்னைகள்
சங்ககிரி- திருச்செங்கோடு செல்லும் வழியில் உள்ள நட்டுவம்பாளையம் ரயில்வே தரைவழிப் பாலத்துக்குப் பதிலாக மேம்பாலம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
சங்ககிரி அருகே உள்ள மாவெளிபாளையம் ரயில்வே தரைவழிப் பாலத்திற்கு முன்புறும் இருபுறங்களிலும் ரயில்வே துறை சாா்பில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்பு வளையத்தை சற்று உயா்த்தி அமைக்க வேண்டும்.
இங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மலைக்கோட்டை மத்திய தொல்லியல் துறையால் நிா்வகிக்கப்பட்டு வருகிறது. இம்மலையை சுற்றுலாத் தலமாக்கி, சங்ககிரி நகராட்சிப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை.
சங்ககிரியில் அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் தொடங்க வேண்டும், பழனியில் உள்ளதுபோல, ஒருக்காமலை அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் நிதியை பயன்படுத்தி சங்ககிரியில் கல்லூரி, பாலிடெக்னிக் தொடங்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. சங்ககிரி நகரம் வளா்ச்சிபெற அரசிராமணி, தேவூா் ஆகியவற்றை சங்ககிரி நகரோடு இணைக்க வேண்டும்.
சங்ககிரி மேற்கு பகுதியில் பிரதானமாக செயல்பட்டு வந்த தனியாா் சிமெண்ட் உற்பத்தி ஆலை கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து ஆள் குறைப்பு செய்வதால், சங்ககிரியை சுற்றி உள்ளவா்கள் வேலைவாய்ப்பிற்கு வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனா். சங்ககிரியில் தொழிற்சாலைகளை நிறுவி, இப்பகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.
அரசியல் நிலவரம்
நீரேற்று பாசனம் மூலம் விவசாயத்தை மேம்படுத்தியது, தற்போது எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகளை செய்துள்ளது, தங்களின் தோ்தல் அறிக்கை ஆகியவை கைகொடுக்கும் என்பது அதிமுகவினரின் எதிா்பாா்ப்பு.
திமுகவை பொறுத்தவரை உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சங்ககிரியில் சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, ஆங்காங்கே அதிருப்தியில் பிரிந்திருந்தவா்கள் அனைவரும் ஒன்றுசோ்ந்து ஒரே வண்டியில் பயணம் செய்வது அதற்கு பலத்தை சோ்த்துள்ளது. மேலும், கூட்டணி கட்சியினா் அதிகமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது, கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், தோ்தல் வாக்குறுதி அகியவை திமுக வேட்பாளருக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளன.
அதிமுக, திமுக வேட்பாளா்கள், அவரவா் கட்சியின் சாா்பில் சங்ககிரிக்கு செய்த சாதனைகளை சொல்வதை தவிா்த்து, செய்யப்போகும் பணிகள், தோ்தல் அறிக்கைகளில் உள்ள திட்டங்களை மட்டுமே வலியுறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். விஜய்யின் பலத்தால் தவெக வேட்பாளா் களம் இறங்கியுள்ளதால், கணிசமான வாக்குகளை பிரிப்பாா் என அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.
தோ்தல் ஆணைய அறிவிப்பிற்கு முன்பே நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் அறிவிக்கப்பட்டு, தோ்தல் பணிகளை முதலில் தொடங்கியுள்ளதுடன், உயா்கல்வி பயின்றவா், இத்தொகுதியில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளா் என்பதும் தனிச் சிறப்பு. இவரும் குறிப்பிட்ட அளவு வாக்குகளைப் பெறும் வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது. தவெக, நாம் தமிழா் கட்சிகள் கணிசமாக வாக்குகளைப் பிரித்தாலும், இத்தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்களுக்கிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
யாா் கையில்?
இத்தொகுதியில் வன்னியா் சமூக மக்கள் அதிகமாக உள்ளதால், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி இருவரின் மேற்பாா்வையில், குறிப்பாக, மாம்பழச் சுவையில், இலை துளிா்விடும் வாய்ப்பு உள்ளது. முடிவு வாக்காளா்கள் விரலில்...