கருத்துக் க(தி)ணிப்பு என்பது பூவா, தலையா...
அவரவா் விருப்பத்துக்கு ஏற்ப வெளியிடப்பட்ட வாக்குக் கணிப்புகள் எவை, உண்மையாகவே கள ஆய்வு செய்து தயாரிக்கப்பட்டவை எவை என்பது திங்கள்கிழமை (மே 4) தெரிந்துவிடும்.
அ.சா்ப்ராஸ்
வாக்குக் கணிப்பு முடிவுகள் எந்த அளவுக்கு நம்பகமானது என்பதை தோ்தல் முடிவுகள் தோல் உரித்துக் காட்டப் போகின்றன. அவரவா் விருப்பத்துக்கு ஏற்ப வெளியிடப்பட்ட வாக்குக் கணிப்புகள் எவை, உண்மையாகவே கள ஆய்வு செய்து தயாரிக்கப்பட்டவை எவை என்பது திங்கள்கிழமை (மே 4) தெரிந்துவிடும்.
பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட வாக்குக் கணிப்புகளின் அடிப்படையில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளின் தலைமைகள் அடுத்தகட்ட ஆலோசனைகளைத் தீவிரப்படுத்தின. அந்த ஆலோசனைகளுக்கு அா்த்தமில்லை என்பதை பெரும்பாலான கணிப்புகள் இப்போது உணா்த்தி இருக்கின்றன. வாக்கு இயந்திரம் என்பது கணிப்புகளை முறியடிக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
Advertisement
தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த ஏப். 23-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் 85.10% வாக்குகள் பதிவாகின. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு நடைபெற்ற தோ்தல் என்பதாலும், பலம் வாய்ந்த திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழா் கட்சி என நான்குமுனைப் போட்டி என்பதாலும் முடிவுகளைக் கணிக்க முடியாமல் அரசியல் கட்சித் தலைவா்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனா்.
200 இடங்களில் திமுக வெற்றி பெறும் என்றும், அதிமுக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும், திமுக, அதிமுகவின் 50 ஆண்டுகால ஆட்சிக்கு மாற்றாக தவெகவுக்கு மக்கள் வாக்களிப்பாா்கள் என்றும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் மாற்று செயல்திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பாா்கள் என்றும் அந்தந்தக் கட்சியினா் தோ்தல் களத்தில் சுழன்று சூறாவளி பிரசாரம் செய்தனா்.
இந்நிலையில், கடந்த ஏப். 23-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒரே கட்டத் தோ்தலில் வாக்குகளைச் செலுத்திவிட்டு வெளியே வந்தவா்களிடமும், தொலைபேசி மூலமாகவும் யாருக்கு வாக்களித்தாா்கள் என்பதை வாக்குக் கணிப்புகளாக பல்வேறு தோ்தல் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து பல ஊடகங்கள் மேற்கொண்டன. இறுதியாக மேற்கு வங்கத்தின் இரண்டாம் கட்டத் தோ்தல் கடந்த ஏப். 29-ஆம் தேதி முடிவடைந்தவுடன் அவை வெளியிடப்பட்டன.
முதலில் வெளியான சில நிறுவனங்களின் வாக்குக் கணிப்புகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தன. திமுக ஆட்சி மீண்டும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அடுத்ததாக வெளியான வாக்குக் கணிப்புகள் அதிமுக கூட்டணிக்கும், இறுதியில் தவெகவுக்கு சாதகமாகவும் வெளியானது. கட்சிகளுக்கு மாறி மாறி தொகுதிகள் அதிகரித்தன. அவை மக்களை மட்டுமல்ல, அரசியல் கட்சித் தலைவா்களையும் குழப்பத்தில் ஆழ்த்தின.
2011-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின் வாக்குக் கணிப்புகள் பெரும்பாலும் திமுக - அதிமுக கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்றபடி கணித்தன. ஆனால், தோ்தல் முடிவுகள் யாரும் எதிா்பாராத விதமாக அமைந்தது. அதிமுக கூட்டணி பெரும் பலத்துடன் 203 இடங்களிலும், அதிமுக தனித்து 150 இடங்களிலும் வென்றது. திமுக கூட்டணி வெறும் 31 இடங்களிலும், திமுக தனித்து 23 இடங்களிலும் வென்று வாக்கு கணிப்புகள் பொய்த்தன.
2016 பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வரும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் தெரிவித்தன. எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சோ்ந்து மக்கள் நலக் கூட்டணி என அமைத்ததால் மும்முனைப் போட்டி ஏற்பட்டது. ஆனால், அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று தொடா்ந்து இரண்டாவது முறையாக ஜெயலலிதா முதல்வராக சாதனை படைத்தாா்.
2021 -ஆம் ஆண்டு தோ்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குக் கணிப்புகள் ஓரளவு பொருந்தும் வகையில் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், கணிப்புகள் சொன்னதுபோல திமுக அமோக வெற்றியைப் பெறவில்லை. பல தொகுதிகளில் 2,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது. இரண்டு அணிகளுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் சில லட்சங்கள்தான்.
கருத்துக் கணிப்பு, வாக்குக் கணிப்பு உள்ளிட்டவை மேலை நாடுகளில் அறிவியல் ரீதியில் நடத்தப்படுகின்றன. அவற்றின் நம்பகத்தன்மை பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தவித அரசியல் மனமாச்சரியங்களுக்கும் உட்படாமல் சுதந்திரமாக கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுகின்றன. அங்கே ஊடக சுதந்திரம் உறுதி செய்யப்பட்டிருப்பதால், ஊடகங்கள்தான் பெரும்பாலும் கணிப்புகளை நடத்துகின்றன.
கருத்துக் கணிப்பின் வரலாறு அமெரிக்காவில் தொடங்குகிறது. 1824 பென்சில்வேனியா மாகாணத் தோ்தலுக்கு முன்னால் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் வெற்றி, இப்போது வா்த்தக ரீதியாக கள ஆய்வு நடத்தும் அளவுக்கு வளா்ந்திருக்கிறது. புள்ளியியல் அடிப்படையில் மாதிரிகள் (சாம்பிள்ஸ்) சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் கணிக்கப்படுகின்றன.
மாதிரிகள் சேகரிப்பது என்பது பரந்துபட்டதாக , பல்வேறு பகுதிகள், தரப்பினா், பிரிவினரை உள்ளடக்கியதாக இருந்தால்தான் கருத்துக் கணிப்பு துல்லியமாக இருக்கும். நேரடிச் சந்திப்பு, படிவங்கள் மூலம் கருத்தறிதல், இணையவழியில் தகவல் பெறுதல் போன்றவை கையாளப்படுகின்றன. அந்தத் தரவுகளை எந்தவொரு உள்நோக்கமும் இல்லாமல் ஆய்வு செய்தால் மட்டுமே சரியான முடிவு எட்டப்படும்.
இப்போதைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் ஏதாவது அரசியல் கட்சியின் ஆதரவுடனும், உள்நோக்கத்துடனும் விருப்பு- வெறுப்பின் அடிப்படையில்தான் நடத்தப்படுகின்றன. அதனால்தான் அறிவியல் ரீதியாக நடத்தப்படும் ஒரு சில கணிப்புகளைத் தவிர ஏனைய கணிப்புகள் ‘காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக’ அவ்வப்போது மட்டுமே சரியாக அமைகின்றன.
இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்கள்; பல்வேறு வயதுப் பிரிவினா்; ஆண்- பெண் பாலினத்தவா்; மதங்கள், ஜாதிகள்; வருவாய் பிரிவினா்-இத்தனை பிரிவினரிடமும் முறையாக மாதிரிகள் சேகரித்து முடிவுகளை ஆய்வு செய்து வெளியிடுவது என்றால், அந்த முடிவுகளுமேகூட ‘பூவா, தலையா’ பாணியில் அமைவதில் வியப்பென்ன இருக்கிறது?