திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?
திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா அல்லது வேண்டுமென்றே பரப்பப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
சொன்னாலும் பொருந்தச் சொல்லணும் என்று சொல்வார்கள், ஆனால் திமுக - அதிமுக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக புதன்கிழமை மாலை முதல் கிளம்பிய தகவல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததே தவிர அதில் உண்மையிருக்காது என்று இரு கட்சிகளின் அடிப்படை உறுப்பினர்களுக்கும் தெரிந்தே இருந்தது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் தவெகவுக்கு 108 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு கிடைத்த போதிலும் பெரும்பான்மை கிடைக்காததால், சில கட்சிகளின் ஆதரவை எதிர்நோக்கியிருக்கிறது.
புதன்கிமை காலை, தவெக கோராத போதும், அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக அறிவித்திருந்தது. ஆனால், அதற்கு தவெக தரப்பில் எந்த பதிலும் சொல்லப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக, நாங்கள் கீழே இறங்கி வந்து ஆதரவு என்று சொன்னாலும் அதனை ஏற்காத தவெகவுக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்துவிட்டது.
Advertisement
Advertisement
பெரும்பான்மையை நிரூபிக்க தவெக பிற கட்சிகளிடம் ஆதரவு கோரிய நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் புதன்கிழமை காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. வியாழக்கிழமை காலை பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன.
ஆனால் நேற்று மாலைக்குப் பிறகு பரபரப்பு குறைந்தது. ஆளுநரிடமிருந்து அழைப்பு வரவில்லை. இதனால் விஜய் வீட்டுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்புகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டன. இதற்கு யார் உத்தரவு பிறப்பித்தார்கள் என்பதெல்லாம் வேறுகதை.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் அல்லாத ஒரு அரசு அமையப்போகிறது என்று பேசப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தாலே விஜய் முதல்வராகலாம்.
அதேவேளையில், ஆளுநரும், 117 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கொண்டு வர வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. தவெகவுக்கு ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துவிட்டது. இன்னும் ஐந்து பேரது ஆதரவு மட்டுமே தேவை.
இந்த நிலையில்தான், நேற்று இரவு முதல் திமுக - அதிமுக கூட்டணி என்ற வதந்தி காட்டுத் தீயாக பரவியது.
இந்த வதந்தியால் இரு கட்சி ஆதரவாளர்களுமே அதிர்ச்சியடைந்தனர். இதற்கு எதிராக கருத்துகளையும் பதிவிட்டு வந்தனர். ஏனெனில், இதுவரை எதிரிக் கட்சிகளாக சந்தித்தவர்களை கூட்டணிக் கட்சியாக பார்க்க வேண்டும் என்றால் உண்மையான களத்தில்தான் சிக்கல் ஏற்படும் என்பதே.
எனவே, இது உண்மையாக பேசப்பட்டு அதிலிருந்து கசிந்து தகவல் பரவியதாகக் காணப்படவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான போது, பலரும் நகைச்சுவையாக திமுக - அதிமுக இணைந்து ஆட்சியமைக்கலாம் என்று கூறிக்கொண்டுதான் இருந்தனர். ஆனால், இவ்வாறு நகைச்சுவையாகப் பேசப்படும் ஒரு தகவல் எவ்வாறு வதந்தியாகப் பரவியது என்பதே கேள்வி.
அடிப்படையில் நிகழ வாய்ப்பே இல்லாத சில தகவல்கள் அவ்வப்போது வதந்தியாக பரவி வருகிறது என்றால், யாரோ வேண்டுமென்றே இதுபோன்ற தகவல்களை பரப்புகிறார்களா? அரசியல் ஆதாயத்துக்காக பரப்பப்படுகிறதா? தவெகவினரை அச்சமடையச் செய்யும் வகையில் இதுபோன்ற வதந்தி பரப்பப்பட்டதா? என்ற விடை தெரியாத பல கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.