திமுக கூட்டணியிலிருந்து விலகாத கட்சிகள் எவை? ஏன்?
திமுக கூட்டணியிலிருந்து விலகாத கட்சிகள் பற்றி...
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பேரவைத் தேர்தலை சந்தித்த பெரும்பாலான கட்சிகள், தேர்தலுக்கு பின்பு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், இன்னும் சில கட்சிகள் மட்டுமே விலகாமல் இருக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, சுமார் 14 கட்சிகள் அடங்கிய மாபெரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்திருந்தது.
இந்தத் தேர்தலுக்கு முன்பே, திமுக மற்றும் தவெக என இரு கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர். கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு, மாநிலங்களவை இடம் ஆகியவற்றை பிரதான கோரிக்கைகளாக வைத்து காங்கிரஸ் காய் நகர்த்தியது.
Advertisement
Advertisement
நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு 28 தொகுதிகளை (கடந்த 2021-ல் 25 தொகுதிகள்) ஒதுக்கியதுடன், ஒரு மாநிலங்களவை இடத்தையும் திமுக வழங்கியது (மற்றொரு மாநிலங்களவை இடம் 2028-ல் கொடுக்கப்படும் என்று திமுக உறுதியளித்திருந்ததாக தகவல்).
இதேபோல், முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிகவுக்கு 10 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டது.
விசிக 8, இந்திய கம்யூனிஸ்ட் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்திலும் போட்டியிடுவோம் என்று கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்திருந்தார். ஆனால், வேட்புமனுத் தாக்கலுக்கு சற்று முன்னதாக, அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
மேலும், மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2, மனிதநேய ஜனநாயக கட்சி 1, எஸ்டிபிஐ 1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இவர்கள் அனைவருமே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர் (எனவே, இவர்கள் திமுக வேட்பாளர்களாகவே கருதப்படுவார்கள்).
திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் கண்டது.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில், திமுக 54 தொகுதிகளில் வெற்றி பெற்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 2, கொமதேக, மஜக, மமக ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன.
இவற்றையும் சேர்த்து சின்னத்தின் அடிப்படையிலான கணக்கின்படி, திமுகவின் வெற்றி 59 ஆகக் கணக்கிடப்படுகிறது.
மேலும், தனிச் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 5, விசிக 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, ஐயூஎம்எல் 2, தேமுதிக ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றன.
இந்த நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜோசப் சி. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க மேஜிக் எண்ணான 118 என்ற பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது.
இந்த சூழலில், திமுக கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கோரி பேச்சுவார்த்தையை தவெக தொடங்கியது. 5 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் காங்கிரஸ் முதல் ஆளாக தவெகவுக்கு ஆதரவு அளித்தது. திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவித்து, இனிவரும் தேர்தல்களில் தவெகவுடன்தான் கூட்டணி என்பதைத் தெளிவுபடுத்திவிட்டனர்.
இதையடுத்து, பெரும்பான்மை கிடைக்காவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படும் என்ற நிலையில், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்தனர். ஆக, இந்தக் கட்சிகளின் ஆதரவோடு தவெகவும் ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகள் தங்களுடன் தொடர்ந்து பயணிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆட்சியில் பங்களிக்கும் என்ற நிலைப்பாட்டை தவெக எடுத்தது.
அதன்படி, காங்கிரஸின் 2 எம்.எல்.ஏ.க்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட நிலையில், விசிகவும், ஐயூஎம்எல் கட்சிகளும் ஆட்சியில் இணைந்துள்ளன. விசிகவின் வன்னி அரசும், ஐயூஎம்எல்லின் ஏ.எம். ஷாஜகானும் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் இணைய தவெக வேண்டுகோள் விடுத்த நிலையில், கொள்கை அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை அவர்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியிலிருந்து விலகாத கட்சிகள்
தனிச் சின்னத்தில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவளித்துவிட்ட நிலையில், தேமுதிகவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மற்ற கட்சிகளும் மட்டுமே திமுக கூட்டணியில் தொடர்கின்றன.
தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்னதாகத்தான் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் திமுக கொடுத்தது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.
மதிமுக, கொமதேக, மஜக, மமக ஆகிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால், திமுகவின் கொறடா உத்தரவை மீறி அவர்களால் செயல்பட முடியாது.
அவர்கள் சுயமாகத் தவெகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் கீழ் எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிடும்.
திமுக அதிருப்தி
திமுக கூட்டணிக் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரிய போது, விசிக, இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகே தவெகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.
ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மரியாதை நிமித்தமாகக்கூட கூட்டணிக் கட்சிகளின் தலைவரான ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியினர் சந்திக்காதது அக்கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மே 7 அன்று நடைபெற்ற கூட்டத்தில், “தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்தைக் வன்மையாகக் கண்டிப்பதாக” தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்த வாரத் தொடக்கத்தில், தூத்துக்குடியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, ”கூட்டணியைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடும் வகையில் நம்மை நாமே பலப்படுத்திக் கொள்ள வேண்டும். திமுகவால் தனித்து வெற்றி பெற முடியும் என்பதை விரைவில் காட்டுவோம்” என்று பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற விசிகவைக் கடுமையாக விமர்சித்து வியாழக்கிழமை திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். எனினும், அந்தப் பதிவுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அதை நீக்கிவிட்டார்.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை முடத்தெங்கு என்று குறிப்பிட்டுப் பதிவொன்றை இட்டுள்ளார்.
இந்த நிலையில், திமுக நிர்வாகிகள் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்று வெள்ளிக்கிழமை மதியம் கட்சியின் தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இத்தகைய பரபரப்பான சூழலில்தான், இனிவரும் காலங்களில் தேர்தல்களில் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம் என்று மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்முறையாகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. முதல்முறையாக விசிக, ஐயூஎம்எல் கட்சியினர் அமைச்சர்களாகி உள்ளனர்.
இன்னும் சில மாதங்களில் வரக் கூடிய உள்ளாட்சித் தேர்தலிலும், 2029 மக்களவைத் தேர்தலிலும் இந்தக் கட்சிகள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!