தவெகவுக்கு ஆதரவு, திமுக கூட்டணியிலிருந்து விலகுவது ஏன்? காதர் மொகிதீன் விளக்கம்!
திமுகவிலிருந்து ஐயுஎம்எல் விலகுவது குறித்து கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் விளக்கம்...
திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) விலகுவதாக கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.
இதுபற்றி விளக்கமளித்த அவர்,
"தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி வந்துவிடும், மு.க. ஸ்டாலின் மீண்டும் வந்துவிடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கடவுளின் எண்ணம் வேறாக இருந்துள்ளது. வெற்றிக்கு உழைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி.
Advertisement
Advertisement
தவெகவுக்கு ஏன் ஆதரவு கொடுத்தோம் என்று ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறோம். 60 ஆண்டுகள் திமுகவுடன் பயணித்தோம். அவரிடம் கலந்து பேசிதான் தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவெடுத்தோம். ஆளுநர் ஆட்சி வந்துவிடும் என்ற அச்சத்தில், அப்படியென்றால் மத்திய பாஜக ஆட்சிதான் தமிழகத்தில் திணிக்கப்படும் நிலைமை வந்துவிடும் என்ற நிலையில், அதற்கு நாங்கள் காரணமாகிவிடக் கூடாது என தவெகவுக்கு ஆதரவு வழங்கினோம்.
தவெகவுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவு அளித்தும் நாங்கள் கேட்காத ஒன்றை, அதாவது அமைச்சரவை பதவியைக் கொடுத்தார்கள். தற்போது நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி தொடர நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம். இந்த ஆட்சி நன்றாக இருக்கிறது என மக்கள் கூறுகிறார்கள். எனவே நாங்களும் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம்.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் பயணிக்க முடியாது. அதனால் திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்.
இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். உள்ளாட்சித் தேர்தலில் எங்கெங்கு வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
மேலும் பத்திரிகையாளர் கேள்விக்குப் பதிலளித்த அவர், 'திமுக கூட்டணிக்கு ஓட்டுபோடுவதுதான் இஸ்லாம் சமூகத்தினரின் ஆறாவது கடமை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. ஜனநாயகத்திற்காக வாக்களிப்பது 6-வது கடமை என்றுதான் கூறினேன்' என்றார்.
why IUML withdraws DMK alliance, Khader Mohideen explains
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.