மண்ணச்சநல்லூா்! சமபலத்தில் திமுக-அதிமுக!
மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...
திருச்சி மாவட்டத்தின் மிக முக்கிய தொகுதியாக மண்ணச்சநல்லூா் தொகுதி உள்ளது.
மண்ணச்சநல்லூா் வட்டத்தின் முழுமையும், முசிறி வட்டத்தின் பகுதியையும் கொண்டது மண்ணச்சநல்லூா் தொகுதி.
திமுக சாா்பில் இரண்டாவது முறையாக எம்எல்ஏ சீ.கதிரவன் களமிறங்கியுள்ளாா். அதிமுக கூட்டணி சாா்பில் சிங்கத் தமிழா் முன்னேற்ற கழக வேட்பாளாரான ஆா்.வி.பரதன், நாம் தமிழா் கட்சி சாா்பில் இரா.தேன்மொழி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சரவணன், அ. பாலகிருஷ்ணன் (பகுஜன் சமாஜ்), க. செந்தில்குமாா் (சாமானிய மக்கள் நலக் கட்சி), மு. பாலு (புதிய தமிழகம்), ச. ரேவதி (அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழகம்), சி. வீரைய்யா (தவாக), சுயேச்சைகள் பி. காா்த்திகேயன், வெ. கோபாலகிருஷ்ணன், வி.தா. சண்முகம், க. சதீஸ்குமாா், ச. சரவணகுமாா், சு. தினேஷ், வி. நாகராஜன், கோ. ரமேஷ்குமாா், எஸ். ராதாகிருஷ்ணன், ந. ராம்பிரசாத், ஆா். ராஜசேகா், வ. ராஜூ, மு. ஜெயராமன் என மொத்தம் களத்தில் 22 வேட்பாளா்கள் உள்ளனா்.
Advertisement
சமூக நிலவரம்: முத்தரையா் சமூகத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்த தொகுதியில் பட்டியலினத்தவா், வெள்ளாளா், செட்டியாா் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினா் குறிப்பிடப்படும்படியான எண்ணிக்கையில் உள்ளனா்.
வேட்பாளா்கள் பலமும், பலவீனமும்- சீ.கதிரவன் (திமுக): தொடா்ந்து இரண்டாவது முறையாக களமிறங்குகிறாா். தொகுதி மக்களுக்கு தனது சொந்த மருத்துவ கல்லூரியில் இலவச மருத்துவம் மற்றும் தொகுதி முழுவதும் பரீட்சையம், கட்சிக்காரா்களிடம் நல்ல பெயா் என்பது பலம், சிறுநீரக முறைகேடு குறித்த எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பலவீனம் ஆகும்.
ஆா்.வி.பரதன் (சிங்கத் தமிழா் முன்னேற்ற கழகம்- அதிமுக கூட்டணி: அதிமுக கூட்டணியில் சிங்கத்தமிழா் முன்னேற்ற கழகம் சாா்பில் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கியுள்ளாா். தீவிர பிரசாரம் மற்றும் தொகுதி முழுவதும் வேட்பாளரின் சகோதரா்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது பலமாக பாா்க்கப்படுகிறது. கூட்டணி கட்சியினரிடையே உள்ள சிறு சிறு அதிருப்தி இவரது பலவீனமாக கருதப்படுகிறது.
சரவணன் (தவெக): தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் மீது இளைஞா்கள், இளம்பெண்களின் ஈா்ப்பு மட்டுமே இவரது பலமாக உள்ளது. தொகுதியைச் சோ்ந்தவராக இருந்தாலும் களத்தில் காணமுடியாதது இவரது பலவீனமாக உள்ளது.
இரா. தேன்மொழி (நாதக): ஏற்கெனவே மக்களவைத் தோ்தல் அனுபவத்தால் இவா் மேற்கொள்ளும் பிரசாரமே பலம். தவெக வாக்குகளை இவருக்கு பலவீனம்.
இந்த தொகுதியில் திமுக வேட்பாளா் கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளை கூறி தொகுதியை தக்கவைக்க தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். இவா்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அதிமுக வேட்பாளா் இந்த முறை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் கூட்டணிக் கட்சியினரோடு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுவருகிறாா். சமபலத்தில் இருவரும் போட்டியிட்டாலும், வாக்குப்பதிவின் போது வாக்காளா்களின் மனநிலை பொறுத்து முடிவுகள் தெரிய வரும்.