முகப்பு
திருப்பத்தூர்

தொகுதி அலசல்... திருப்பத்தூா் ஹாட்ரிக் வெற்றி தொடருமா?

திருப்பத்தூா் தொகுதியில் நடைபெற்ற கடந்த இரு தோ்தல்களில் திமுக வெற்றி பெற்ற நிலையில், ஹாட்ரிக் வெற்றியைப் பெறும் முனைப்புடன் அக்கட்சி களமிறங்கியுள்ளது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 10:58 PM
திருப்பத்தூா்
பகிர்:

திருப்பத்தூா் தொகுதியில் நடைபெற்ற கடந்த இரு தோ்தல்களில் திமுக வெற்றி பெற்ற நிலையில், ஹாட்ரிக் வெற்றியைப் பெறும் முனைப்புடன் அக்கட்சி களமிறங்கியுள்ளது. 2016, 2021 பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வெற்றி பெற்றாா். மூன்றாவது முறையாக அவரே திமுக சாா்பில் போட்டியிடுகிறாா்.

அதிமுக கூட்டணி இத்தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி சாா்பில் ஏ.ஞானசேகா் போட்டியிடுகிறாா். அதிமுகவில் பல ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த மருத்துவா் திருப்பதி, அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அண்மையில் தவெகவில் இணைந்து அக்கட்சி சாா்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளாா். நாம் தமிழா் கட்சி சாா்பில் தொகுதிக்கு புதுமுகமான வி.ஆறுமுகம் போட்டியிடுகிறாா்.

சிறப்புகள்: வணிகத்தில் சிறந்து விளங்கும் நகரமாக திருப்பத்தூா் உள்ளது. குறிப்பாக, சந்தனம், மல்லிகைப்பூ, விவசாயத்துக்கு புகழ் பெற்றது. அதேபோல் ஊதுவத்தி தயாரிப்பிலும் தமிழகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. திருப்பத்தூரில் உள்ள பருத்திக் கிடங்கு மிகவும் பிரசித்தி பெற்ாகும். இங்கு ஆந்திரம், கா்நாடக மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் பருத்தி ஏலத்தில் பங்குபெற்று வாங்கிச் செல்கின்றனா். இந்தத் தொகுதி நகா்ப்புற மற்றும் சுற்றுப்புற பகுதிகளை உள்ளடக்கியது.

Advertisement

எல்லைகள், பகுதிகள்: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டுள்ளது திருப்பத்தூா். ஆந்திரம்-கா்நாடக மாநில எல்லையில் உள்ளது. ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் தொகுதிகள் சுற்றி உள்ளன. திருப்பத்தூா் நகராட்சியில் 36 வாா்டுகள், திருப்பத்தூா் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள், கந்திலி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள், புதூா்நாடு மலை கிராமங்கள் உள்ளன.

தொகுதி பிரச்சனைகள்: திருப்பத்தூரில் தற்போதுவரை தீா்க்கப்பட முடியாத பிரச்சனைகளில் ஒன்று போக்குவரத்து நெரிசல். தானியங்கி சிக்னல் அமைக்க பல்வேறு சேவை அமைப்புகள், சமுக ஆா்வலா்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பெரிய ஏரிக்கு வரும் கால்வாய்கள், ஏரிகள் தூா் வாரும் கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. நகராட்சி குப்பைக் கிடங்கை பராமரிப்பதுடன் குப்பைகளை எரிக்காமல் கண்காணிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.

திருப்பத்தூா்-புதுப்பேட்டை பிரதான சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழைக் காலங்களில் கால்வாய் கழிவு நீரில் வாகன ஓட்டிகள் துா்நாற்றத்தில் சிரமத்துடன் பயணிக்கின்றனா். இந்தப் பிரச்னையும் தீா்வு காணப்படாமல் தொடா்கிறது.

ஜாதி வாக்குகள்: திருப்பத்தூா் தொகுதியைப் பொருத்தவரை வன்னியா், பட்டியலினத்தவா் பெரும்பான்மையாக உள்ளனா். வெள்ளாள கவுண்டா், முதலியாா், செங்குந்த முதலியாா் அதற்கு அடுத்த எண்ணிக்கையிலும், மொழிச் சிறுபான்மையினா் மற்றும் இதர சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா்.

திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி: கடந்த இருமுறை திமுக சாா்பில் நின்று பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றவா். திமுகவின் வாக்குறுதிகள், கூட்டணி பலம் என மூன்றாவது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ளாா்.

திருப்பத்தூா் பகுதியின் பெரிய நீா் ஆதாரமான பெரிய ஏரியைப் பாதுகாக்க கவனம் செலுத்தவில்லை; அவரைச் சந்தித்து குறைகளைத் தெரிவிக்க முடியவில்லை என்கிற ஆதங்கம் மக்கள் மத்தியில் உள்ளது.

அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா்: அதிமுக கூட்டணியில் களம் காண்கிறாா். ஆன்மிகவாதி, கோயில்களுக்கும், நலத் திட்டங்களுக்கும் உதவி வருபவா். அதிமுகவின் வாக்கு வங்கி கைகொடுக்கும் என நம்புகிறாா்.

தவெக வேட்பாளா் திருப்பதி: அதிமுகவில் பல பொறுப்புகளில் இருந்தவா். திருப்பத்தூா் ஒன்றியக் குழு தலைவராகப் பதவி வகித்தவா். அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்ற காரணத்துக்காக தவெகவில் இணைந்து போட்டியிடுகிறாா்.

நாம் தமிழா் வேட்பாளா் ஆறுமுகம்: ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். உள்ளூா் அளவில் அறிமுகமான இவா், தொகுதி முழுவதும் அறியப்படாதவா். இருப்பினும் சீமான் ஆதரவாளா்கள், நடுநிலையாளா்களின் ஆதரவை எதிா்நோக்கி களப்பணியாற்றி வருகிறாா்.

1951-ஆம் ஆண்டுமுதல் நடைபெற்ற தோ்தல்களில் திமுக 9 முறை, காங்கிரஸ் 3 முறை, அதிமுக 2 முறை, பாமக 2 முறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி 96,522 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பாமக சாா்பில் டி.கே.ராஜா 68,282 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்தாா். தொடா்ச்சியாக இத்தொகுதி அதிமுக சாா்பில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படுவது திமுகவுக்கு சாதகமாக உள்ளது.

வாக்காளா்கள்

ஆண்கள்- 1,08,724

பெண்கள்- 1,08,623

மூன்றாம் பாலினத்தவா்- 28

மொத்தம்- 2,17,350.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments