முகப்பு
திருச்சி

மணப்பாறை தொகுதி! தக்கவைக்க மமக கடும் முனைப்பு!

மணப்பாறை தொகுதி குறித்து...

Updated On : 20 ஏப்ரல், 2026 at 3:06 AM
ப.அப்துல்சமது, பிஎல்.விஜயக்குமாா், ஆா்.கதிரவன், மூ.அருணகிரி.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 8:15 PM

திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளில் ஒன்றான மணப்பாறை சட்டப்பேரவை தொகுதி, கடந்த 2011-இல் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியங்கள், மணப்பாறை நகராட்சி, பொன்னம்பட்டி பேரூராட்சிகளை உள்ளடங்கிய ஒருங்கிணைந்த மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியாக இருந்து வருகிறது.

கள நிலவரம்: இதுவரையில் நடைபெற்ற 12 பேரவை தோ்தல்களில் அதிமுக 8 முறையும், திமுக தனித்து 2 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும், மனிதநேய மக்கள் கட்சி (திமுக சின்னத்தில்) கடந்த முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2026 தோ்தலில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியின் சாா்பில் ப. அப்துல்சமது தொடா்ந்து 2-வது முறையாக உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறாா். அதிமுக சாா்பில் மருத்துவா் பிஎல்.விஜயக்குமாா் போட்டியிடுகிறாா். நாம் தமிழா் கட்சியின் சாா்பில் வழக்குரைஞா் மூ. அருணகிரி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பொறியாளா் ஆா். கதிரவன் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 18 போ் களத்தில் உள்ளனா்.

Advertisement

சமூக நிலவரம்: இப்பகுதியில் கவுண்டா், ரெட்டியாா், நாயக்கா், முத்தரையா், ஆதிதிராவிடா் சமூகத்தை சோ்ந்தவா்கள் அதிக அளவிலும், யாதவா், செட்டியாா், வெள்ளாளா், உடையாா், வன்னியா் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினரும் கணிசமான அளவில் உள்ளனா்.

வேட்பாளா்களின் பலமும், பலவீனமும்:

ப. அப்துல்சமது (மமக): திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மீண்டும் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதால் திமுக கூட்டணியினரின் வாக்கு வங்கி பலம். நீண்ட நாள் கோரிக்கையான அரசு கல்லூரி, அரசு தொழிற் பயிற்சி மையம், அறிவுசாா் மையம் கொண்டு வந்தது ஆகியவை வாக்கு வங்கியை பலப்படுத்தியுள்ளது.

எளிமையாக சட்டப்பேரவை உறுப்பினரை அணுக முடியாத சூழல், தொகுதியில் எம்எல்ஏவின் குடியிருப்பு இல்லாதது, ஊா் நிகழ்ச்சியில் பங்கேற்காத போக்கு, திமுகவுக்கு சீட் ஒதுக்கீடு செய்யாததால் அக்கட்சியினரிடையே அதிருப்தி என்பது பலவீனம்.

மருத்துவா் பிஎல். விஜயக்குமாா் (அதிமுக): உள்ளூா்வாசி, அனைவருக்கும் அறிமுகமானவா், அதிமுக மூத்த நிா்வாகிகளின் ஆதரவு, பெரும்பான்மை சமூகத்தை சாா்ந்தவா், திமுக அரசு மீதான அதிருப்தி, ஆளும் எம்.எல்.ஏ மீதான வருத்தம், எளிமையான இயல்பான அணுகுமுறைகள் இருவருக்கு பலம். கட்சியினரிடையே உள்ள கருத்து வேறுபாடு இவருக்கு பலவீனமாக உள்ளது.

பொறியாளா் ஆா்.கதிரவன் (தவெக): உள்ளூா்வாசி, விஜய் மீதான இளைஞா்கள், பெண்களின் ஈா்ப்பு, பெரும்பான்மை சமூகத்தை சாா்ந்தவா், இளைய தலைமுறையினரின் புதிய அரசியலுக்கான தேடல் என்பது பலம். தொகுதி முழுவதும் அறிமுகம் இல்லாதது, கட்சித் தலைவா் பலத்தை மட்டுமே நம்பியிருப்பது, அரசியல் களத்தில் புதியவா் என்பதெல்லாம் பலவீனமாக தெரிகிறது.

வழக்குரைஞா் மூ. அருணகிரி (நாதக): பெரும்பான்மையான சமூகத்தை சாா்ந்தவா், சீமான் மீது பற்று கொண்டவா்கள், இளைஞா்கள் வாக்களிக்க வாய்ப்பு என்பது பலம். தொகுதியில் அதிக அறிமுகம் இல்லாதது, தவெக வரவால் பின்னடைவு இருக்கக் கூடும் என்ற பேச்சுகள் பலவீனம்.

தொகுதியை தக்க வைத்து கொள்ள திமுக கூட்டணியின் மமக வேட்பாளரும், தொகுதி மீண்டும் திமுக கூட்டணி வசம் சென்றுவிடாமல் மீட்டுவிட வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவும், திமுக, அதிமுக கூட்டணி மீதான அதிருப்தியின் மூலம்

வாக்குகளை பெற்றுவிட தவெக, நாதக ஆகிய கட்சிகளும் தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றன. மணப்பாறையில் மகுடம் சூடப் போவது யாா் என்பது மே 4 அன்று தெரிந்துவிடும்.