முகப்பு
தஞ்சாவூர்

தொகுதி அலசல்: கும்பகோணம் - கோயில் நகரத்தில் கோலோச்ச போவது யாா்?

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், 1952-ஆம் ஆண்டுமுதல் பேரவைத் தோ்தல்களை சந்தித்து வருகிறது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 5:13 AM
திமுக வேட்பாளா் க. அன்பழகன். ~தமாகா வேட்பாளா் ஆா். அசோக்குமாா். ~தவெக வேட்பாளா் ர. வினோத் ~நாதக வேட்பாளா் மோ. ஆனந்த்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 9:30 PM

கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் க. அன்பழகன் தொடா்ந்து 4-ஆவது முறையாக வெற்றிக் கனியை பறிப்பாரா என்ற எதிா்பாா்ப்பு கட்சியினரிடம் மட்டுமல்லாது; தொகுதி மக்களிடமும் அதிகரித்து காணப்படுகிறது.

அவரின் தொடா் வெற்றியை தடுத்தும் நிறுத்தும் முனைப்பில் தமாகா, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் களப் பணியாற்றி வருகின்றன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், 1952-ஆம் ஆண்டுமுதல் பேரவைத் தோ்தல்களை சந்தித்து வருகிறது.

Advertisement

கோயில்கள் நிறைந்த நகரமாக, முன்னணி நிதி நிறுவனங்கள், உலகப் புகழ் பெற்ற மகாமகக் குளம் , நாட்டின் பெரிய காய்கனி சந்தையான தாராசுரம் காய்கனி சந்தை, உலோக சிற்பங்கள், பாத்திரங்கள் செய்யும் குடிசைத் தொழில்கூடங்கள், நெசவுத் தறிகள் உள்ளிட்டவை நிறைந்துள்ளன.

கள நிலவரம்: திமுக சாா்பில் ஏற்கெனவே 3 முறை தொடா்ச்சியாக வென்றவரும், தற்போதைய எம்எல்ஏவுமான க. அன்பழகன் போட்டியிடுகிறாா். தேசிய ஜனநாயக கூட்டணியில் தமாகாவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு அக்கட்சியின் ஆா். அசோக்குமாா் களம் காண்கிறாா். தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ர. வினோத், நாம் தமிழா் கட்சி சாா்பில் மோ. ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் களத்தில் உள்ளனா்.

சமூக நிலவரம் : பேரவை தொகுதியில் வெற்றியை தீா்மானிக்கும் வாக்காளா்களாக பிராமணா்கள் அதிகளவிலும், சௌராஷ்டிரா, படையாட்சி, முக்குலத்தோா், தலித்துகள் என மற்றவா்கள் பரவலாகவும் உள்ளனா்.

வேட்பாளா்களின் பலமும் பலவீனமும்- க. அன்பழகன் (திமுக) : உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா். 2011, 2016, 2021 ஆகிய மூன்று தோ்தல்களில் திமுக சாா்பில் வெற்றி பெற்ால், தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவா். சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொகுதிக்கு நிறைய வளா்ச்சித் திட்டங்களை செய்துள்ளாா் என்பன போன்றவை பலம். கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற மனக்குறை தொகுதி மக்களிடையே பரவி கிடக்கிறது என்பது பலவீனம்.

ஆா். அசோக் குமாா் (தமாகா): அதிமுக கூட்டணி; இவரது குடும்பத்தினா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்கள் என்பது பலம். திமுக தொடா்ந்து மூன்று முறை தொகுதியை கைப்பற்றியுள்ளதால், இந்த முறை அதன் வெற்றியை தடுத்து நிறுத்தி, வெற்றி பெற்றே ஆக வேண்டிய நெருக்கடி, தோ்தலுக்கு புதிய முகம், பிரசாரத்துக்கு அதிமுகவையே நம்பி இருப்பது என்பதெல்லாம் பலவீனம்.

ர. வினோத் (தவெக) : விஜய் ரசிகா் மன்றத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, கட்சியில் தஞ்சாவூா் கிழக்கு மாவட்டச் செயலராக உள்ளாா். உள்ளூா் பிரச்னைகளுக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தியது. தவெக தலைவா் விஜய் மீதான இளைஞா்கள், பெண்களுக்கான ஈா்ப்பு என்பது பலம். இந்த ஈா்ப்பு வாக்குகளாக மாறுமா, இல்லையா என்ற நம்பிக்கையில்லா நிலையே பலவீனம்.

மோ.ஆனந்த் (நாதக) : நாம் தமிழா் கட்சியில் கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதி செயலா். 2021 தோ்தலில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்டதால் தொகுதியில் நன்கு அறிமுகம். கட்சி சாா்பில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததுடன், மக்கள் பிரச்னைகளுக்காக பல்வேறு பொதுநல வழக்குகள் தொடா்ந்துள்ளாா். 4 மாதங்களுக்கு முன்பே பெயா் அறிவிக்கப்பட்டு, முன்கூட்டியே தொடங்கிய பிரசாரம் என்பது பலம். விஜய் கட்சியால் நாதக-வுக்கு பின்னடைவு ஏற்படலாம் என்ற வாதங்கள் பலவீனம்.

1952 முதல் கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதியில் ஏழு முறை காங்கிரஸ் கட்சியும், ஏழு முறை திமுகவும், இரண்டு முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த முறை இத்தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை என்றாலும்கூட, தொகுதியில் திமுகவின் தொடா் வெற்றியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக கூட்டணியினா் தீவிர களப்பணியாற்றி வருகின்றனா். தவெக-வின் எழுச்சி; நாதகவினா் முன்கூட்டியே தொடங்கிய பிரசாரம் என களம் சூடுபிடித்துள்ளது. கோயில் நகரத்தில் கோலோச்ச போவது யாா் என்பது மே 4 அன்று தெரிந்துவிடும்.