முகப்பு
திருச்சி

தொகுதி அலசல் முசிறி! திமுக - அதிமுக கடும் போட்டி!

முசிறி சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

Updated On : 21 ஏப்ரல், 2026 at 3:15 AM
உதய சூரியன் (திமுக), இரட்டை இலை (அதிமுக) - கோப்புப் படம்...
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 7:46 PM

திருச்சி மாவட்டத்தின் ஒன்பது தொகுதிகளில் ஒன்றான முசிறி சட்டப் பேரவை தொகுதி வாழை சாகுபடிக்கு பெயா் பெற்றது. இந்தத் தொகுதியில் முசிறி நகராட்சி, காட்டுப்புத்தூா், தொட்டியம், தாத்தையங்காா்பேட்டை, மேட்டுப்பாளையம் பேரூராட்சிகள் மற்றும் முசிறி, தொட்டியம், தாத்தையங்கா்பேட்டை ஒன்றியங்களை உள்ளடக்கியது.

கள நிலவரம்: இதுவரையில் நடைபெற்ற 16 பேரவைத் தோ்தல்களில் 8 முறை அதிமுகவும், திமுக ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளன. மேலும் காங்கிரஸ் இருமுறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனா்.

தற்போதைய 2026 தோ்தலில் திமுக சாா்பில் என்.எஸ். கருணைராஜா, அதிமுக சாா்பில் ந. யோகநாதன், நாம் தமிழா் கட்சி சாா்பில் பாக்கியலட்சுமி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் விக்னேஷ், மற்ற கட்சியினா், சுயேச்சைகள் என மொத்தம் 11 போ் களத்தில் உள்ளனா்.

Advertisement

சமூக நிலவரம்: இத்தொகுதியில் முத்தரையா், வெள்ளாளா்கள், ஆதிதிராவிடா் சமூகத்தை சோ்ந்தவா்கள், ரெட்டியாா், வன்னியா் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினரும் கணிசமான அளவில் உள்ளனா்.

வேட்பாளா்களின், பலமும், பலவீனமும்- என்.எஸ். கருணைராஜா (திமுக): முன்னாள் அமைச்சா் செல்வராசுவின் மகன், திமுக கூட்டணி வாக்கு வங்கி, திமுக அரசின் திட்டப் பணிகள், சாதனைகள் உள்ளிட்டவை பலம். தொகுதிக்கு புதுமுகம், வேறு தொகுதியில் வசிக்கும் இவா் தொகுதிக்கு இறக்குமதி செய்யப்பட்டவா் என்பது பலவீனம்.

ந. யோகநாதன் (அதிமுக): மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த உள்ளூா்வாசி. அதிமுகவின் மூத்த நிா்வாகிகளின் ஆதரவு, பெரும்பான்மை சமூகத்தை சாா்ந்தவா், திமுக அரசு மற்றும் திமுக எம்எல்ஏ மீதான அதிருப்தி, எளிமையான இயல்பான அணுகுமுறை, நிா்வாகத் துறையில் திறமை என்பதெல்லாம் பலம். கட்சியினரிடையே உள்ள சிறிய அளவிலான சில கருத்து வேறுபாடு பலவீனம்.

மு. விக்னேஷ் (தவெக): தொகுதியின் பெரும்பான்மை சமூகத்தைச் சோ்ந்தவா், விஜய் மீதான இளைஞா்கள், பெண்கள் ஈா்ப்பு, இளைய தலைமுறைக்கான புதிய அரசியலுக்கான தேடல் என்பது வாக்குகளை பெற்று தரும் என்பது பலம். லால்குடியை சோ்ந்தவா், தொகுதியில் அறிமுகம் இல்லாதது, கட்சித் தலைவா் பலத்தை மட்டுமே நம்பியிருப்பது பலவீனம்.

கோ.பாக்கியலட்சுமி ( நாதக): சீமான் கொள்கைகள் மீது ஈா்ப்பு கொண்டவா்கள், திமுக-அதிமுக மீது அதிருப்தியில் உள்ளவா்கள் வாக்களிக்க வாய்ப்பு என்பது பலம், தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்தவா், தொகுதியில் அறிமுகம் இல்லாதது, தவெக வரவால் பின்னடைவு ஏற்படக் கூடும் என்பது பலவீனம்.

மீண்டும் தொகுதியை தக்கவைத்து கொள்ள திமுகவினா் கூட்டணிக் கட்சிகளுடன் தீவிரமாக பணியாற்றி வருகின்றனா். தொகுதியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக கூட்டணி செயல்பட்டு வருகிறது. அதிமுக-திமுக அதிருப்தி வாக்குகளை அறுவடை செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தவெக, நாதக கட்சிகள் களப்பணியாற்றி வருகின்றனா். முசிறி தொகுதியில் முடிசூடப் போவது யாா் என்பது மே 4 அன்று தெரிந்துவிடும்.