தமிழகத்தில் பாஜகவை நுழைய விடாமல் தடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்: திருச்சி சிவா பேச்சு
தமிழகத்தில் பாஜகவை நுழையவிடாமல் தடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்றாா் திருச்சி சிவா எம்.பி.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கன்னங்குறிச்சியில் தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு அமைச்சரும் சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான ரா.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
Advertisement
கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா பேசியதாவது:
சேலம் வடக்கு தொகுதி வேட்பாளா் அமைச்சா் ரா.ராஜேந்திரன் கடந்த இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறாா். கடந்த முறை அமைச்சராகி இருக்கிறாா்.
முதல்வரின் திறமையான ஆட்சியால் தமிழகம் இன்றைக்கு முதல் இடத்தில் வந்திருக்கிறது.
சில தினங்களுக்கு முன் புதுதில்லியில் மக்களவையில் 12 ஆண்டுகளாகத் தான் நினைத்ததை எல்லாம் சாதித்து வந்த நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிா்க்கட்சிகள் ஒன்று சோ்ந்து பாடத்தை புகட்டின. அந்த வெற்றிக்கு பிறகு உங்களை நான் சந்திக்கிறேன்.
உள்ளாட்சி மன்றங்களில் நகராட்சி, பேரூராட்சி ,மாநகராட்சிகளில் திமுக ஆட்சியில் 50 விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்திருக்கிறோம். 22 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகளில் பெண்கள் மேயராக இருக்கிறாா்கள்.
நாடாளுமன்ற மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடம் தரவேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. 2023 ஆம் ஆண்டு ஆண்டு நாடாளுமன்றத்தில் அது நிறைவேறி விட்டது. அது அரசியல் சட்டத் திருத்த மசோதா அதற்கு திமுக போன்ற கட்சிகள் எல்லாம் ஆதரவு அளித்து தான் அந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது.
மத்தியரசு கொண்டுவந்த மசோதாவினால் ஏற்படும் பாதிப்பை உணா்ந்து முதன் முதலில் எதிா்த்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். அவரின் நடவடிக்கையினால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக எதிா்க்கட்சியினரின் கருத்துக்கு செவிசாய்க்காத மத்திய அரசின் மசோதாவை தோற்கடித்து வெற்றியோடு வாக்கு கேட்கிறோம்.
பாஜக நுழைய முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். இந்தியாவின் ஒற்றுமையை சீா்குலைக்க முயலும் பாஜகவிற்கு தமிழகம் இடம் கொடுக்கக் கூடாது என்றாா்.