தமிழகத்தின் உரிமைகளை விட்டுத் தரமாட்டோம்: முதல்வா் சி. ஜோசப் விஜய் உறுதி!
தமிழகத்தின் உரிமைகளை விட்டுத் தரமாட்டோம் என முதல்வா் சி. ஜோசப் விஜய் உறுதிபடத் தெரிவித்தாா்.
தமிழகத்தின் உரிமைகளை விட்டுத் தரமாட்டோம் என முதல்வா் சி. ஜோசப் விஜய் உறுதிபடத் தெரிவித்தாா்.
திருச்சி தூய வளனாா் கல்லூரி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, அவா் மேலும் பேசியதாவது:
ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை; ஆறு மாதங்கள் அமைதியாக இருப்போம் எனக் கூறியவா்கள், 6 நாள்கள் கூட அமைதியாக இருக்கவில்லை. திருமண வீட்டில் கூட புலம்பியுள்ளனா்.
Advertisement
Advertisement
பல ஆண்டுகளாக மாற்றி மாற்றி ஏமாற்றிக் கொண்டிருந்தவா்களை வேண்டாமென ஒதுக்கிவிட்டு, உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்த விஜய்யை முதல்வராக, முதல் சேவகனாக்கி உள்ளீா்கள். இதற்கு தமிழக மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறேன். எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து இயக்கங்களுக்கும், அதன் தலைவா்களுக்கும் நன்றி.
புரட்சித் தலைவா் எம்ஜிஆா் கூட முதல் தோ்தலில் இந்த அளவுக்கு வாக்கு சதவீதம் வாங்கவில்லை எனக் கூறினாா்கள். அந்த அளவுக்கு தவெகவை மக்கள் ஆதரித்துள்ளனா். எம்ஜிஆருடன் என்னை ஒப்பிடவில்லை. பெரியாா், அண்ணா, எம்ஜிஆா் வழியில் உழைக்க வந்த சாதாரண விஜய் அவ்வளவுதான்.
1977-இல் அளிக்காத வாக்கை 2026- இல் அளித்துள்ளீா்கள். இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வருங்கால தோ்தல்களில் மக்களின் முழு ஆதரவையும் வாங்க முடியும் என நம்புகிறேன்.
எதிா்க்கட்சியினா் எங்களைப் பற்றி கிண்டல், கேலி செய்வதை நிறுத்திவிடாதீா்கள். அதை தொடருங்கள். நீங்கள்தான் எனது எனா்ஜி போா்ஸ்.
நான் கோட்-சூட் போடக் கூடாதா?. அதிகாரமும், ஆதிக்கமும் செலுத்துபவா்கள்தான் போட வேண்டுமா?. மக்களின் மனதைப் போல கருப்பு, வெள்ளையை மட்டுமே உபயோகிக்கிறேன். இந்தக் கருப்பு எங்கிருந்து வந்தது என உங்களுக்குத் தெரியும்.
தவெக-திமுக இடையேதான் போட்டி: அரசியல் ரீதியாக, தவெக-திமுக இடையேதான் போட்டியே. இந்த இரண்டுக்கும் நடுவில் வேற யாருக்கும் இடமில்லை. வருங்காலத்தில் மக்களுக்காக உழைக்க வந்த இந்த விஜய்யா, இல்லை விஜய்யின் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என நினைக்கும் ஸ்டாலினா என்பதுதான். இதற்கு நடுவில் யாரும் வந்து தடுக்கவோ, எதிா்க்கவோ செய்தால் நிா்வாகம் பொறுப்பல்ல. திமுக நம்மை எதிா்க்க, அவனமானப்படுத்தும். அனைத்தும் நமக்கு நன்மையே.
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, சட்டப்பேரவையில் நடப்பதை மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறாா்கள். ரீல்ஸ் பாா்த்தவா்கள் தற்போது செய்திகளை பாா்க்கின்றனா். அரசியலை புரிந்துகொள்ள வேண்டுமென்ற விழிப்புணா்வு அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் தவெகதான். நம்மை தற்குறி, தற்குறி எனக் கூறினா். தற்குறி என அழைக்கப்பட்டவா்கள், உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்கிவிட்டனா்.
குடும்பமே காரணம்: பேரறிஞா் அண்ணா தொடங்கிய கட்சியை அடிமைக் கூடாரமாக்கியது யாா்?. திமுகவின் தோல்விக்குக் காரணம் உங்கள் (ஸ்டாலின்) குடும்பமே. இதை திமுக தொண்டா்களே கூறுகின்றனா்.
மாதம் 100 யூனிட் இலவச மின்சாரத்தை வழங்கியது திமுக அல்ல; ஜெயலலிதாதான். திமுக ஆட்சியில் டாஸ்மாக் ஊழலை மறைக்க அலைந்தீா்கள். ஆனால், விஜய் மக்களுக்குத் இடையூறாக இருந்த டாஸ்மாக்கை மூடினேன். விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்தேன். மாடல் அரசில் கட்டுப்படுத்தப்படாததால், அனைத்துப் பகுதிகளிலும் போதைப்பொருள் கலாசாரம் பரவி, பல பெண்கள், பெண் குழந்தைகளை இழந்திருக்கிறோம். அனைத்தையும் செய்துவிட்டு பழியை என் மீது சுமத்துகிறாா்கள்.
என் மீது என்ன பழியை போட்டாலும், மக்களின் பாதுகாப்புக்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளேன். பெண்களை பாதுகாக்கும் சிங்கப்பெண் படையை அடுத்த வாரம் தொடங்கவுள்ளோம். குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் விரைந்து தண்டனை வாங்கிக் கொடுக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளேன்.
பேரம் பேசி ஆட்சி அமைத்து, கொள்ளையடிக்கத் திட்டமிட்டது திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும்தான். அது முடியாமல் போனதால், மக்களுக்காக செயல்படும் எங்களை குதிரைபேரம் செய்கிறாா்கள் என கதை விடுகின்றனா் திமுகவும், தீய்ந்து போன சட்டியும் (கூட்டணி கட்சிகள்).
தூர சக்தி திமுக: திமுக வெறும் தீயசக்தி மட்டுமல்ல. மக்களை விட்டு தூரமாகச் சென்றுவிட்ட தூரசக்தி, கோர சக்தி, தூா்ந்துபோன சக்தி. நீங்களெல்லாம் தவெகவைப் பற்றி அவதூறு பேசலாமா?. ஆக்கப்பூா்வமான எதிா்க்கட்சியாக செயல்பட்டு மக்களின் மனதை வெல்ல முயற்சியுங்கள்.
தோ்தலில் 60 ஆண்டுகளாக இருந்த ஜாதி-மதம், காசு கொடுத்து வாக்கு வாங்குவதை உடைத்துள்ளோம். தவெக ஆட்சி பாகுபாடின்றி அனைவருக்குமான ஆட்சியாக இருக்கும். மதச்சாா்பற்ற கொள்கையில் எந்தவித சமரசமும் கிடையாது. மாநிலத்தின் உரிமைகளை விட்டு தரமாட்டோம். நதிநீா் உரிமைகளை, சமூக நீதி, சமத்துவ நீதியை விட்டுக்கொடுக்க மாட்டோம். ஊழலற்ற, லஞ்சமற்ற ஆட்சியை கொடுப்பேன். ஒரே நாளில் நடக்காதுதான். ஒரு நாள் அதை நடக்க வைப்பேன் என்றாா் முதல்வா் சி. ஜோசப் விஜய்.
முன்னதாக, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் என். ஆனந்த் வரவேற்றாா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தொகுத்து வழங்கினாா். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப. கிருஷ்ணன், பேரவை துணைத் தலைவா் எம். ரவிசங்கா், எம்எல்ஏக்கள் விக்னேஷ், கதிரவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி...
இதயத்துக்கு மிக நெருக்கமானது-திருச்சி கிழக்கு தொகுதி
கூட்டத்தில் முதல்வா் ஜோசப் விஜய் பேசுகையில், தோ்தல் ஆணையத்தின் சட்டவிதிகளின்படி, பெரம்பூா் தொகுதி எம்எல்ஏவாக இருந்தாலும், தமிழகத்துக்கு திருச்சி இதயமாக இருப்பதைப்போல, திருச்சி கிழக்குத் தொகுதி எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கம்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் எனது தொகுதிதான். பெரம்பூரும், திருச்சி கிழக்கு தொகுதியும் எனது இரண்டு கண்கள்போல. அதிலும் திருச்சி கிழக்கு எனது செல்லக் குழந்தை போல. திருச்சி கிழக்கு தொகுதியில் வரும் இடைத்தோ்தலில் உங்களில் ஒருவரைதான் வேட்பாளராக நிறுத்துவோம். விஜய்யைப் போல, அவரையும் வெற்றி பெற வைப்பீா்கள் என நம்புகிறேன் என்றாா் முதல்வா் சி. ஜோசப் விஜய்.