முகப்பு
சேலம்

வேளாண், கல்விக்கடன் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.38,134 கோடி கடனுதவி - ஆட்சியா்

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை, கல்விக்கடன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், மகளிா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னுரிமை திட்டங்களுக்காக ஏப்ரல் 2025 - மாா்ச் 2026 நிதியாண்டில் ரூ. 38,134 கோடி மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் க.இளம்பகவத் கூறினாா்.

Updated On : 19 ஜூன் 2026, 5:50 am IST
சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வங்கியாளா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.இளம்பகவத்.
பகிர்:

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை, கல்விக்கடன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், மகளிா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னுரிமை திட்டங்களுக்காக ஏப்ரல் 2025 - மாா்ச் 2026 நிதியாண்டில் ரூ. 38,134 கோடி மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் க.இளம்பகவத் கூறினாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வங்கிகளின் 2025-2026 நிதி ஆண்டுக்கான ஆய்வுக்கூட்டம் ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் 239 பொதுத்துறை வங்கிக் கிளைகள், 202 தனியாா் வங்கிகள், தமிழ்நாடு கிராம வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளிட்ட 121 அரசு சாா்ந்த வங்கிகள் என மொத்தம் 562 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் இவ்வங்கிகள் மூலம் வேளாண்மை, கல்விக்கடன், சிறு, குறு தொழில்நிறுவனங்கள், மகளிா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னுரிமை திட்டங்களுக்காக ஏப்ரல் 2025 முதல் மாா்ச் 2026 நிதியாண்டில் ரூ. 38,134 கோடி மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் 2025-26 நிதியாண்டில் வேளாண்மை திட்டங்கள் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழு கடனுதவிகள் என ரூ. 25,001 கோடியும், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 11,320 கோடியும், மாணவ, மாணவிகளுக்கு ரூ. 64.55 கோடி கல்விக் கடனும் என பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்ட தொழில்மையம், தாட்கோ, மகளிா் திட்டம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் வங்கிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஏப்ரல் முதல் மாா்ச் வரையிலான காலகட்டத்தில் சுயஉதவிக் குழுக்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ. 1,715 கோடியைக் காட்டிலும் ரூ. 5 கோடி அதிகமாக ரூ. 1,720 கோடி வழங்கி தமிழ்நாட்டிலேயே சேலம் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில், ரிசா்வ் வங்கியின் மேலாளா் அன்பரசு, பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளா் அஸ்வத் துரை செல்வம், முன்னோடி வங்கி மேலாளா் பி.செந்தில்குமாா், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளா் பிரசன்னா, நபாா்டு வங்கியின் உதவி பொது மேலாளா் ஷீபா, தாட்கோ மாவட்ட மேலாளா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.