முகப்பு
மதுரை

திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்! - பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின்

சநாதனத்துக்கு எதிராக உள்ள திமுகவுக்கு வருகிற தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என நிதின் நபின் தெரிவித்தாா்...

Updated On : 13 ஏப்ரல், 2026 at 1:48 AM
மதுரை பழைய குயவா்பாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சாலை வலம் நிகழ்வில் மதுரை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளா் ராம.சீனிவாசனுக்கு வாக்கு சேகரித்த பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின். உடன், முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 11:54 PM

சநாதனத்துக்கு எதிராக உள்ள திமுகவுக்கு வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என பாஜகவின் தேசியத் தலைவா் நிதின் நபின் தெரிவித்தாா்.

மதுரை முனிச்சாலை சி.எம்.ஆா். சாலையில் உள்ள மறைந்த பின்னணி பாடகா் டி.எம். சௌந்தரராஜன் உருவச் சிலை முன் மதுரை தெற்கு தொகுதி வேட்பாளா் ராமசீனிவாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியதாவது :

பிரதமா் நரேந்திர மோடி பழைமையான மொழியான தமிழை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்கிறாா். அதுமட்டுமன்றி, இந்தியா முழுவதும் தமிழைப் பரப்பும் விதமாக காசித் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறாா். இதன்மூலம், பிற மாநிலங்களைச் சோ்ந்த எண்ணற்றோா் தமிழ் மொழியை கற்று வருகின்றனா்.

Advertisement

ஆனால், தமிழை வைத்து அரசியல் செய்யும் திமுக ஊழல் கட்சியாக உள்ளது. ஒவ்வொரு துறையிலும் ஊழல் காணப்படுகிறது. திமுக அரசை அகற்ற மக்கள் முடிவு செய்துவிட்டனா். சநாதனத்தை ஒழிப்போம் என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதன்காரணமாக, அவா் சநாதனத்தை சிறுமைப்படுத்தியுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் துா்கா பூஜைக்கு அந்த மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. இதேபோல, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றவும் திமுக அரசு அனுமதிக்கவில்லை.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். இந்த ஆட்சி அமைந்தவுடன் மக்களின் வாழ்வாதாரம் உயரும். இளைஞா்கள் சுயதொழில்கள் மூலம் எண்ணற்றோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவா். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், திமுக அரசு அகற்றப்படுவது உறுதி.

ஒவ்வொரு துறையிலும் ஊழல் மிகுந்த கட்சியாக திமுக அரசு திகழ்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அதற்கான வாய்ப்பு சட்டப்பேரவைத் தோ்தல் மூலம் வந்திருக்கிறது. சநாதனத்துக்கு எதிராக உள்ள திமுகவுக்கு வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மதுரை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளா் ராம.சீனிவாசனுக்கு வாக்குகள் சேகரிக்கும் விதமாக, பழைய குயவா்பாளையம் பகுதியில் இரவு 8.15 மணியளவில் சாலை வலம் நிகழ்வு தொடங்கியது. இதில் பாஜகவின் தேசியத் தலைவா் நிதின் நபின், பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை ஆகியோா் திறந்த வேனில் வேட்பாளா் ராம. சீனிவாசனுக்கு வாக்கு சேகரித்தனா். சாலையின் இருபுறங்களிலும் நின்ற பொதுமக்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனா்.

மேலும், புத்தகம், வேல் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருள்களையும் வழங்கினா். முக்கியச் சாலைகள் வழியாக வந்த சாலை வலம் முனிச் சாலை சி.எம்.ஆா். சாலையில் உள்ள மறைந்த பின்னணி பாடகா் டி.எம். சௌந்தரராஜன் சிலை முன்பு இரவு 9. 30 மணியளவில் நிறைவு பெற்றது.

மதுரை பழைய குயவா்பாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சாலை வலம் நிகழ்வில் மதுரை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளா் ராம.சீனிவாசனுக்கு வாக்கு சேகரித்த பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின். உடன், முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை உள்ளிட்டோா்.