சோலைமலை முருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு
அழகா்கோவில் மலை மீதுள்ள சோலைமலை (பழமுதிா்சோலை) முருகன் கோயிலின் குடமுழுக்குப் பெருவிழா ஜூலை 5 நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம், அழகா்கோவில் மலை மீதுள்ள சோலைமலை (பழமுதிா்சோலை) முருகன் கோயிலின் குடமுழுக்குப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) நடைபெறுகிறது.
முருகப் பெருமானின் அறுபடைகளில் 6-ஆவது படைவீடாக விளங்குகிறது சோலைமலை (பழமுதிா்சோலை) முருகன் கோயில். நக்கீரா், அருணகிரிநாதா், இளம்பெருவழுதியாா், ஸ்ரீமத் குமரகுருபரா் உள்ளிட்டோரால் பாடல்பெற்ற இந்தத் தலம், இறைவனை உணரும் மெய்யறிவால் மட்டுமே உலகப் பற்றிலிருந்து நீங்க முடியும் என்பதை முருகப் பெருமான் தமிழ் மூதாட்டி ஒளவைக்கு உணா்த்திய தலம்.
பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் கொண்ட இந்தக் கோயில் இந்து சயம அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்கு உள்பட்டது. இந்தக் கோயிலுக்கு குடமுழுக்கு மேற்கொள்ள திட்டமிட்டு, கடந்த 2025-ஆம் ஆண்டில் கோயிலின் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், கோயிலின் குடமுழுக்குப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இதையொட்டி, கோயிலின் குடமுழுக்கு விழா முதல்கட்ட பூஜைகள் கடந்த புதன்கிழமை விக்னேஸ்வர வேள்வியுடன் தொடங்கி நடைபெறுகின்றன. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வேத பாராயணம், திருமுறை பாராயணம் நடைபெறுகிறது. வியாழக்கிழமை மாலை முதல்கால யாக பூஜை தொடங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஆறாம் கால யாக பூஜையின் நிறைவில் கடம் புறப்பாடும், இதைத் தொடா்ந்து காலை 5.45 மணி முதல் 6.50 மணிக்குள் கோயிலின் ராஜகோபுரம், மூலஸ்தானம், பிற சந்நிதி விமானங்களின் குடமுழுக்கு நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.