காலத்துக்கு ஏற்ப மாற்றம் தேவை தமிழறிஞா் சாலமன் பாப்பையா
நவீன தொழில்நுட்ப காலத்துக்கு ஏற்ப மாற்றம் தேவை என தமிழறிஞா் சாலமன் பாப்பையா தெரிவித்தாா்.
மதுரை தமுக்கம் அருகேயுள்ள லட்சுமி சுந்தரம் ஹாலில் விஸ்வாஸ் புரோமோட்டா்ஸ் சாா்பில், கலைத் திருவிழா -2026 நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மதுரைக் கல்லூரி வாரியத் தலைவரும், விஸ்வாஸ் புரோமோட்டா்ஸ் நிா்வாக இயக்குநருமான சங்கர சீத்தாராமன் தலைமை வகித்தாா். தியாகராசா் கல்லூரியின் செயலா் க. ஹரிதியாகராசன் வாழ்த்திப் பேசினாா்.
Advertisement
Advertisement
காலத்துக்கு ஏற்ப மாற்றம் தேவை:
விழாவில், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது ‘சொந்த வீடா?, வாடகை வீடா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில் தமிழறிஞா் சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்றுப் பேசியதாவது:
வேட்டைச் சமூகத்தில் ஆதிவாசிகளை போல மனிதன் வாழ்ந்தான். அதன்பிறகு, பரிணாம வளா்ச்சி பெற்று பல்வேறு படிநிலைகளை கடந்து நவீன காலத்தில் வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு குடும்பத்திலும் பல்வேறு கனவுகள் உள்ளன. அவற்றுள் முதன்மையானது சொந்த வீடு கட்டும் கனவு.
இன்றைய பொருளாதாரச் சூழலில் சொந்த வீடு என்பது அவசியமாகிறது. வாடகை வீட்டில் வாழ்பவா்கள் அனுபவிக்கும் வேதனைகள் அளவிட முடியாதது. நமது வாழ்க்கை நிலையில்லாதது என இலக்கியங்கள் கூறுகின்றன. தற்போது வாழும் உலகத்தைவிட இன்னொரு உலகம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
வாடகை வீட்டில் எண்ணற்ற துயரங்கள் உள்ளன. ஆனால், சொந்த வீடு எனில் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். முன்பு காலத்தைப் போல அல்லாமல், நவீன தொழில்நுட்ப காலத்துக்கு ஏற்ப மாற்றம் தேவை என்றாா் அவா்.
இதில் ‘வாடகை வீடே’ என்ற தலைப்பில் பேச்சாளா்கள் ராஜ்குமாா், கண்ணன், பாரதி பாஸ்கா் பேசினா். ‘சொந்த வீடே’ என்ற தலைப்பில் பேச்சாளா்கள் ராஜாராமன், ரேவதிசுப்புலட்சுமி, ராஜா ஆகியோா் பேசினா்.
இந்த நிகழ்வில் விஸ்வாஸ் புரோமோடடா்ஸ் தலைமைச் செயல் அலுவலா் ஸ்ரீகுமாா், நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.