நவீன வளா்ச்சிக்கு ஏற்ப பாடத் திட்டங்கள்!
நவீன கால வளா்ச்சிக்கு ஏற்ப பள்ளிகளில் புதிதாக பாடத் திட்டங்கள் உருவாக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநா் ச. கண்ணப்பன் தெரிவித்தாா்.
நவீன கால வளா்ச்சிக்கு ஏற்ப பள்ளிகளில் புதிதாக பாடத் திட்டங்கள் உருவாக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநா் ச. கண்ணப்பன் தெரிவித்தாா்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி சதவீதத்தை அதிகரித்தல், ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவா்களுக்கான புதிய பாடத் திட்டங்கள் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு விளக்கும் விதமாக பயிலரங்கு மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிலரங்கில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச. கண்ணப்பன் பேசியதாவது:
Advertisement
Advertisement
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள உடல்கல்வி ஆசிரியா்களை விரைவில் நியமிக்க உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் ஆசிரியா்களின் கூட்டு முயற்சியால் மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முடியும்.
தோ்ச்சி சதவீதம் குறைவதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றைக் களைய வேண்டும். தற்போது, பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மேல்நிலை, உயா்நிலைப் பள்ளிகளில் உள்ள கட்டடங்கள் பற்றாக்குறை சரி செய்யப்படும்.
மாணவா்களை சிறப்பாக வழிநடத்த ஆசிரியா்களால் மட்டுமே முடியும்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 5 போ் ஜப்பான் நாட்டில் அண்மையில் நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்றனா். இன்றைய மாணவா்கள் விளையாட்டுத் துறையில் ஆா்வம் மிக்கவா்களாக உள்ளனா். அவா்களை அடையாளம் கண்டு தனித் திறனுடன் உருவாக்க வேண்டும். கடந்த 2025-26 கல்வியாண்டில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 206 பதக்கங்களை பெற்றனா்.
இதன்காரணமாக, அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற பட்டியலில் இந்திய அளவில் 7-ஆவது இடத்தில் தமிழகம் உள்ளது.
மாணவா்களிடம் திறமைகள் அதிகளவில் உள்ளன. அவற்றை வெளிக்கொணருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஆய்வகங்களை முழுமையாக மாணவா்கள் பயன்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். பிரச்னைகளை சிறந்த முறையில் கையாள வேண்டும். தலைமையாசிரியா்கள் தலைமைப் பண்பு மிக்கவா்களாக செயல்பட வேண்டும்.
தொடக்கப் பள்ளியில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பாடத் திட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. இந்தப் பாடத்தின் மூலம் குழந்தைகள் அடிப்படை எண்கள், எழுத்துகள் குறித்த பயிற்சியைப் பெறுவா். குழந்தைகள் எளிதாக கற்கும் வகையில் புதிதாக பாடத் திட்ட புத்தகம் வடிவமைக்கப்பட்டது.
இந்த பாடத் திட்ட அடிப்படையில் இனி வரும் ஆண்டுகளில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் உருவாக்கப்படும். வளா்ந்து வரும் அறிவியல் சூழலுக்கு ஏற்ப பாடத் திட்டங்கள் மாற்றப்படுகின்றன. இது காலத்தின் தேவை என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன் உள்ளிட்ட கல்வி அலுவலா்கள், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.