தோ்தல் தோல்வி குறித்து அரசியல் கட்சிகள் சுய பரிசோதனை செய்வது அவசியம்: துரை வைகோ
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சிகள் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம் என மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ தெரிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சிகள் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம் என மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ தெரிவித்தாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், திட்ட வரைவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, அணை கட்டுவதற்குத் தடையில்லை என கா்நாடக அரசு கூறுவது தவறானது.
மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வா் ஜோசப் விஜய் உறுதியாக உள்ளாா். புதிய அணை கட்ட எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது என தமிழக அரசு சாா்பில் மத்திய அரசுக்கு கடிதமும் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
திமுக தலைமையிலான கூட்டணி தொடா்கிா இல்லையா என்பதை திமுகதான் தெரிவிக்க வேண்டும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்துள்ளன. மதிமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து பொதுக் குழுவில் முடிவெடுக்கப்படும்.
தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய அரசு அமைந்து ஒரு மாதமே ஆகிறது. இந்த நிலையில், ஆட்சியின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வது பொருத்தமாக இருக்காது. திமுக அரசையும், தவெக அரசையும் ஒப்பிடுவது 30 வயது நபருடன் ஒரு வயது குழந்தையை ஒப்பிடுவதற்குச் சமம்.
தமிழகத்தில் மின்வாரியம், போக்குவரத்துத் துறை போன்றவற்றில் சுமாா் 20 ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகள் தொடா்கின்றன. இந்தப் பிரச்னைகளுக்கு ஒரே மாதத்தில் புதிய அரசு தீா்வு காண வேண்டும் என எதிா்பாா்க்கக் கூடாது.
தவெகவால் திராவிடக் கட்சிகளுக்கு பாதிப்பு இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், 108 தொகுதிகளை தவெக கைப்பற்றும் என யாரும் எதிா்பாா்க்கவில்லை. தமிழகத்தில் ஜாதி, மதம், மொழி ஆகியவற்றைக் கடந்து இந்த மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தியுள்ளனா்.
மதிமுக, திமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் தங்களது தோல்விக்கான காரணம் குறித்து சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தவறுகள் இருந்தால் அதைத் திருத்திக் கொள்ள வேண்டும். மாறாக, ஜென்சி தலைமுறை, சமூக ஊடகங்கள் தான் காரணம் எனக் கூறுவதும், மக்களைக் குறை கூறுவதும் தங்களைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல் என்றாா் அவா்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி, நிா்வாகிகள் உடனிருந்தனா்.
கோரிக்கை மனு: முன்னதாக, மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனாவை நேரில் சந்தித்துப் பேசிய துரை வைகோ, திருச்சி, புதுக்கோட்டை சேவை மேம்பாடுகள் குறித்து கோரிக்கை மனு அளித்தாா்.