முகப்பு
திருச்சி

‘இண்டி’ கூட்டணி கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும்: துரை வைகோ எம்.பி. பேட்டி

தில்லியில் நடைபெறவுள்ள இண்டி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ தெரிவித்தாா்.

Updated On : 7 ஜூன் 2026, 2:18 am IST
திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை பேட்டியளித்த துரை வைகோ எம்.பி.
பகிர்:

தில்லியில் நடைபெறவுள்ள இண்டி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ தெரிவித்தாா்.

இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: தமிழக முதல்வா் ஜோசப் விஜய் உடனான சந்திப்பின்போது அரசியல் பேசவில்லை. திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குத் தேவையான திட்டங்கள், மக்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் விவாதித்தேன். குறிப்பாக, விமான நிலைய ஓடுதள விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

திருச்சியில் உலா் துறைமுகம் அமைக்க வேண்டும். திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும். கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள், மின்சார வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தேன். இதையடுத்து கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

முதல்வா் ஏற்கெனவே கூறியதுபோல இந்த அரசு குதிரை பேர அரசல்ல. குதிரை வேகத்தில் செயல்படக்கூடிய அரசு என்பதற்கு இதுவே சாட்சி. தில்லியில் நடைபெறவுள்ள இண்டி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும். மதச் சாா்பற்ற மற்றும் வளா்ச்சி அரசியலை முன்னிலைப்படுத்தி அரசியல் இயக்கத்தை தொடங்குவதாக அண்ணாமலை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அப்படிப்பட்ட அரசியலை முன்னெடுத்தால் அதை ஆரோக்கிய அரசியலாகத்தான் பாா்க்கிறேன்.

இதுவரை பாஜகவில் இருந்துவிட்டு திடீரென மதச்சாா்பற்ற அரசியலை எப்படிச் செயல்படுத்த போகிறீா்கள் என்பதை அண்ணாமலையிடம்தான் கேட்க வேண்டும்.

காங்கிரஸ் மீதுள்ள மன வருத்தத்தின் காரணமாகவே, இண்டி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டின் பிரச்னைகளுக்காக அரசியலைக் கடந்து அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும். வரும் காலத்தில் அது நடக்கும் என நம்புகிறேன்.

நிா்பந்தத்தின் காரணமாகவே நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். கட்சி அங்கீகாரம் தொடா்பாக ஒரு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தோம். அப்போதைய முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அதற்கு அனுமதித்தாா். ஆனால், கடைசி நேரத்தில் கட்சியில் இருக்கக்கூடிய முக்கிய நிா்வாகிகள் அந்த ஒரு தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட நிா்பந்தத்தை ஏற்படுத்தினாா்கள். இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வரை நான் குற்றம்சாட்ட விரும்பவில்லை. இருப்பினும், இன்றுவரை நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடா்கிறோம்.

வரும் 27ஆம் தேதி நடைபெறும் எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கும்போது, கட்சியின் அடுத்தகட்ட நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்தும் விவாதித்து முடிவெடுப்போம் என்றாா் துரை வைகோ.