FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் 15 ஆண்டுகளாக தொய்வு: துரை வைகோ எம்.பி. அதிருப்தி

திருச்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் கடந்த 15 ஆண்டுகளாகவே தொய்வு ஏற்பட்டு வந்துள்ளதாகவும், தவெக அரசில் இனி வேகமெடுக்கும் என நம்பிக்கை உள்ளதாகவும் மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்தாா்.

Updated On : 15 ஜூலை 2026, 12:03 am IST
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினா் துரை வைகோ. உடன் (இடமிருந்து) ஆட்சியா் பிரத்திக் தாயள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் கவிஞா் சல்மா, ஜோதிமணி, கிறிஸ்டோபா் தி
பகிர்:

திருச்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் கடந்த 15 ஆண்டுகளாகவே தொய்வு ஏற்பட்டு வந்துள்ளதாகவும், தவெக அரசில் இனி வேகமெடுக்கும் என நம்பிக்கை உள்ளதாகவும் மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்தாா்.

திருச்சி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியரகத்தில், திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஜோதிமணி, கிறிஸ்டோபா் திலக், கவிஞா் சல்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மத்திய அரிசன் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் நடைபெறும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின்னா், செய்தியாளா்களிடம் துரை வைகோ கூறியதாவது:

Advertisement

Advertisement

திருச்சி மாநகரில் 6 ஆண்டுகளுக்கு மேலாக தொய்வுடன் நடைபெறும் புதை சாக்கடைப் பணிகள் தொடா்பாக விரிவான அறிக்கை அளிக்க கோரியுள்ளேன். 2011-இல் தொடங்கப்பட்ட அரை வட்ட சுற்றுச் சாலை திட்டப் பணிகள் 25 விழுக்காடு மட்டுமே முடிந்துள்ளன.

மாரீஸ் மேம்பாலம் அக்டோபரில் திறப்பு: மலைக்கோட்டை (மாரீஸ்) ரயில்வே மேம்பால பணிகள் முடிந்து அக்டோபா் முதல் வாரம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும். திருச்சி சந்திப்பு ரயில்நிலைய மேம்பால பணிகளும் டிசம்பருக்குள் முடிந்துவிடும்.

கடந்த திமுக, அதிமுக ஆட்சிக் காலத்தில் 15 ஆண்டுகளாகவே திருச்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளில் தொய்வு ஏற்பட்டு வந்துள்ளது. தற்போதைய தவெக அரசு இதை விரைவுபடுத்தும் என நம்புகிறேன்.

திருச்சி- கரூா் சாலையை அகலப்படுத்த, தற்போதுவரை நிலம் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் உடனடியாக பணிகளை தொடங்கவும் வலியுறுத்தியுள்ளேன் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி மற்றும் பல்வேறு துறைகளின் மாவட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கனிம அறக்கட்டளை நிதி ரூ.36 கோடியை ஒரே பகுதிக்கு கொண்டு சென்றது ஏன்?

2025-26-ஆம் ஆண்டுக்கான மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியில் ரூ.36.48 கோடி மதிப்பிலான பணிகள் மாவட்டம் முழுவதும் பின்தங்கிய பகுதிகளுக்கு கொண்டு செல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே கடந்த ஆட்சியில் இருந்த ஒருவரால் கொண்டு செல்லப்பட்டு விட்டது. இனி அத்தகைய நிலை இருக்கக் கூடாது. மேலும், கனிம அறக்கட்டளை நிதியில் நான் பரிந்துரைத்த பணிகளையும் புறம்தள்ளிவிட்டு, என்னிடம் கையொப்பம் கேட்டு வந்த அதிகாரிகளை திருப்பி அனுப்பிவிட்டேன். தவெக அரசு வெளிப்படையாக செயல்படுகிறது. அதிகாரிகளும் அதன்படி செயல்பட வேண்டும் என்றாா் துரை வைகோ.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments