திண்டுக்கல்

ஆலய கட்டண தரிசனத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

DIN

தமிழகத்தில் ஆலய கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல்  மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,  இந்து முன்னணி அமைப்பின்  மாவட்டப் பொதுச் செயலர் எஸ். சங்கர்கணேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, மாநில இணை அமைப்பாளர் எஸ். ராஜேஷ் கலந்துகொண்டார்.
முன்னதாக, அவர் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் கட்டண தரிசனம் என்ற  பெயரில் பக்தர்களிடையே திட்டமிட்டு பிரிவினை ஏற்படுத்தப்படுகிறது. கட்டணம் செலுத்தி சுவாமி தரிசனம் செய்ய  வேண்டியதிருப்பதால், பல பக்தர்கள் அதிருப்தி அடைகின்றனர். ஆனால், பக்தர்களின் உணர்வுகளுக்கு  மதிப்பளிக்காமல் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருகிறது.       பக்தர்களிடம் வசூலிக்கும் பணத்தில், அந்தந்த கோயில்களில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை. அதனால், பக்தர்களிடம் தரிசனத்துக்கு கட்டணம் வசூலிப்பதை அறநிலையத் துறை கைவிட வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில், மாவட்டத் தலைவர் எஸ். மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வத்தலகுண்டு: வத்தலகுண்டு காளியம்மன் கோயில் அருகே ஆலயங்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்யக் கோரி, இந்து முன்னணியினர்  ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்துக்கு, இந்து முன்னணியின் மாவட்டத் தலைவர் சி. வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் இரா. அண்ணாத்துரை முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். பழனிவேல்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், இந்து ஆலயங்களில் சுவாமி தரிசனம் செய்ய  ரூ. 20 முதல் ரூ.1000 வரை அரசால் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதேபோல், கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். கோயில் சொத்துகளை மீட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், வத்தலகுண்டு ஒன்றிய, நகர இந்து முன்னணியினர் கலந்துகொண்டனர்.
பழனி:  இந்து முன்னணி சார்பில், பழனி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே ஞாயிற்றுக்கிழமை  ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  
ஆர்ப்பாட்டத்துக்கு, நகரப் பொதுச் செயலர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் ஜெகன் சிறப்புரையாற்றினார்.  மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் எழுச்சியுரை நிகழ்த்தினார்.  ஆர்ப்பாட்டத்தின் போது, ஆலயங்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்யவும், பழனிக் கோயிலில் வேற்று மதத்தினருக்கு பல்வேறு ஒப்பந்தங்களுக்கு அனுமதித்துள்ளதை ரத்து செய்யவும் கோரி  கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில்,  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ராஜசேகர், அருணாகுமார், ரகுபதி,  நகர துணைத் தலைவர் சிவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, நகரச் செயலர் பிரவீண் வரவேற்புரை வழங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT