முகப்பு
திண்டுக்கல்

4 ஆண்டுகளாக பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை: 100 பள்ளிகளில் வரலாற்று ஆசிரியர் பணியிடம் காலி

கடந்த 4 ஆண்டுகளாக மேல்நிலைப் பள்ளி வரலாற்று ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு

Updated On : 3 டிசம்பர் 2018, 8:04 am IST
பகிர்:

கடந்த 4 ஆண்டுகளாக மேல்நிலைப் பள்ளி வரலாற்று ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படாத நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செய்திதொடர்பு செயலர் மு.முருகேசன் கூறியதாவது:
தமிழகத்தில் 2,488 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு கலைப் பிரிவை அடிப்படையாக கொண்டு 9 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் மூலம் 50 சதவீதமும், நேரடி நியமனத்தின் மூலம் 50 சதவீதமும் முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டு வருகிறது.  ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வின் மூலம் வழங்கப்படவில்லை. 
அரசு சார்பில் 1: 3 என்ற விகிதாசாரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பட்டு வந்த நிலையில், சில ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் விகிதாசாரத்தை மாற்றி அமைக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 
அதே நேரத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 1:1 என்ற விகிதாசாரப்படி பதவி உயர்வு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் முடிவு எட்டப்படாத நிலையில், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் கடந்த 4 ஆண்டுகளாக பட்டதாரி வரலாற்று ஆசிரியர்கள், எவ்வித பதவி உயர்வும் பெறாமல் ஓய்வுப் பெற்று வருகின்றனர். இன்றைய சூழலில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில், வரலாற்று ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக கலைப் பிரிவுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், தமிழக அரசு வரலாற்று ஆசிரியர்களை நியமிக்க துரிதமாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.