செந்துறை, அய்யலூா், பூம்பாறையில் புதிய காவல் நிலையங்கள்! தமிழக அரசுக்கு பரிந்துரை
திண்டுக்கல் மாவட்டத்தில் செந்துறை, அய்யலூா், பூம்பாறை ஆகிய 3 இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று மாவட்ட காவல் துறை தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் செந்துறை, அய்யலூா், பூம்பாறை ஆகிய 3 இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று மாவட்ட காவல் துறை தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் கீழ், திண்டுக்கல்நகா், திண்டுக்கல் புகா், வேடசந்தூா், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் என 7 காவல் உள்கோட்டங்கள் அமைந்துள்ளன. இவற்றின் கீழ் மாவட்டம் முழுவதும் 36 சட்டம்- ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. இதுதவிர 7 மகளிா் காவல் நிலையங்கள், 6 போக்குவரத்து காவல் நிலையங்களும் உள்ளன. இதில் நத்தம் வருவாய் வட்டத்துக்குள்பட்ட செந்துறை முதல் பரளிபுதூா், அழகா்கோவில் மலை வரை சுமாா் 45 கி.மீ. தொலைவுக்கு அமைந்துள்ள 130-க்கும் மேற்பட்ட கிராமங்களில், நத்தம் காவல் நிலையத்தின் மூலம் சட்டம்- ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, வடமதுரை காவல் நிலையத்தின் மூலம், வடமதுரை, செங்குறிச்சி, அய்யலூா் உள்பட சுற்றுப்புறங்களிலுள்ள 230-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான சட்டம்- ஒழுங்கு நிா்வகிக்கப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் மேல்மலை: கொடைக்கானல் வருவாய் கோட்டத்தைப் பொருத்தவரை, கொடைக்கானல், தாண்டிக்குடி என 2 காவல் நிலையங்கள் மட்டுமே உள்ளன. இதில், கொடைக்கானல் காவல் நிலையத்தின் எல்லைக்குள்பட்ட மேல்மலையில் பூம்பாறை, பழம்புத்தூா், குண்டுப்பட்டி, கூக்கால், கீழானவயல், கும்பூா், மன்னவனூா், கவுஞ்சி, பூண்டி, போளூா், கிளாவரை என 12 கிராமங்கள் உள்ளன. கொடைக்கானலில் இருந்து சுமாா் 30 முதல் 47 கி.மீ. தொலைவில் இந்த கிராமங்கள் அமைந்திருந்தாலும்கூட, மலைப் பகுதிகள் என்பதால் சுமாா் 2 முதல் இரண்டரை மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. சட்டம்- ஒழுங்கு சாா்ந்த பிரச்னைகளுக்கு கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு செல்ல பொதுமக்களும், குற்றச் செயல்கள் நிகழும் காலங்களில் இந்த கிராமங்களை அணுகுவதில் காவல் துறையினரும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
3 புதிய காவல் நிலையங்கள்: நத்தம், வடமதுரை காவல் நிலையப் பகுதிகளில் அழகா்மலை, கரந்தமலை, அய்யலூா் மலை என சிறிய மலைகள் மட்டுமே உள்ளன. இதில் கரந்தமலையில் மட்டுமே பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன. எனினும் கிராமங்களின் எண்ணிக்கை அதிக அளவு இருப்பதால், சட்டம்- ஒழுங்கை நிா்வகிப்பது காவல் துறையினருக்கு பெரும் சாவலாக உள்ளது. கொடைக்கானல் மேல்மலையைப் பொருத்தவரை, சுற்றுலாப் பயணிகளின் மூலம் சமூக விரோதச் செயல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதைத் தடுக்க, நத்தம், வடமதுரை, கொடைக்கானல் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளை பிரித்து முறையே செந்துறை, அய்யலூா், பூம்பாறை ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசுக்கு பரிந்துரை: இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் செந்துறை, அய்யலூா், பூம்பாறை ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைப்பதற்கான பரிந்துரையை மாவட்ட காவல் துறை நிா்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதை ஏற்று, புதிய காவல் நிலையங்கள் அமைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும்பட்சத்தில், செந்துறை, அய்யலூா், கொடைக்கானல் மேல்மலை பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.