மதுரை

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நோட்டீஸ் அனுப்ப கிராம நிர்வாக அலுவலருக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நோட்டீஸ் அனுப்ப கிராம நிர்வாக அலுவலருக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த கே.ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
 நான் தொண்டி பகுதியில் உள்ள கடற்கரை புறம்போக்கில் 2 சென்ட் இடத்தில் கடல் மீன்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறேன். இந்த இடத்திற்கு முறையாக மின் இணைப்பு பெற்று, சொத்து வரியும் செலுத்தி வருகிறேன். இப்பகுதியில் இதுபோல பலரும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தக் கடை ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் உள்ளதாகவும், எனவே இதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் தொண்டி கிராம நிர்வாக அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான பிரச்னைகளில் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அலுவலருக்கு அதிகாரம் கிடையாது. எனவே எனது கடையை அகற்றக் கோரி தொண்டி கிராம நிர்வாக அலுவலர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜெ.அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு கையெழுத்திட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கு ஆட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு தான் அதிகாரம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனுதாரருக்கு தொண்டி கிராம நிர்வாக அலுவலர் அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. ஆக்கிரமிப்புகள் இருப்பின் அதை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT