உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்கக் கோரிய மனு தள்ளுபடி
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என உத்தரவிடக்கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ராஜிவ் ராஜா, ஹரிகிருஷ்ணன் உள்பட 5 பேர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்துத் துறைகளுக்கும் பணிக்கு செல்வதற்கு அடிப்படை கல்வித் தகுதி உள்ளது. ஆனால் உள்ளாட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு கல்வித் தகுதி ஏதும் இல்லை. தற்போது அனைத்து துறைகளிலும் கணினியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதற்கு கணினி குறித்த அடிப்படை அறிவு அவசியம். ஆனால், ஆட்சியாளர்களின் கல்வித் தகுதி குறித்து எந்தவிதமான வழிகாட்டுதல்களும் இல்லை.
பிகார், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலில் கல்வித் தகுதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்திலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இளங்கலை பட்டப் படிப்பை நிர்ணயிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.