கேபிள் டிவிக்கு 18 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு
கேபிள் டிவி கட்டணத்துக்கு 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என கேபிள் ஆபரேட்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கேபிள் டிவி கட்டணத்துக்கு 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என கேபிள் ஆபரேட்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கேபிள் ஆபரேட்டர்கள் கில்டு அமைப்பினர், தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் இக்கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
கேபிள் டிவிக்கு பொதுமக்கள் செலுத்தக் கூடிய மாதாந்திரக் கட்டணத்துக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது. இதனால், பொதுமக்கள் தற்போது செலுத்தும் கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கேபிள் ஆபரேட்டர்கள் கில்டு அமைப்பின் தலைவர் ஏ.பாண்டி கூறியது:
மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) அறிவிப்பின்படி, மத்திய அரசு ஒளிபரப்பக் கூடிய 25-க்கும் மேற்பட்ட சேனல்கள் மற்றும் கட்டணம் இல்லாத சேனல்கள் என 100 சேனல்களுக்கு ரூ.130 மாதாந்திர கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு 18 சதவீத ஜிஎஸ்டி சேர்த்து ரூ.153.40 செலுத்த வேண்டும். இதுதவிர மக்கள் அதிகம் விரும்பும் கட்டண சேனல்களைப் பார்க்க வேண்டுமெனில், அதற்குத் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். ஆகவே, 18 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தைப் பொருத்தவரை 100 சேனல்களுடன், மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் சேனல்கள் அனைத்தும் கட்டண சேனல்களாக இருக்கின்றன. இதனால், மாதாந்திரக் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கட்டண சேனல்கள் விளம்பரத்தின் மூலம் அதிக வருவாய் ஈட்டுகின்றன. ஆகவே, பொதுமக்களிடம் இந்த சேனல்களுக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் குறைக்கும் வகையில் கட்டண சேனல்களுக்கான வரியை 18-லிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டம்: கேபிள் டிவி கட்டணத்துக்கு 18 சதவீத வரி விதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர் பொதுநல சங்கத்தினர் மதுரை பழங்காநத்தத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலத் தலைவர் பி.ஆர்.தணிகைவேல், மாவட்டத் தலைவர் கண்ணன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கோரிக்கை குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தணிகைவேல் கூறியது:
விரும்பும் சேனல்கள் அனைத்தையும் பார்க்க தற்போது கேபிள் கட்டணமாக அதிகபட்சம் ரூ.300 வரை மட்டுமே மக்கள் செலவழிக்கின்றனர்.
டிராய் அமைப்பின் புதிய கட்டண விகிதங்களின்படி, கட்டணம் 3 மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சேனல் குழுமத்தில் ஒரு சேனல் மட்டும் மக்கள் பார்க்க வேண்டும் என நினைத்தாலும், அனைத்து சேனல்களுக்கும் கட்டணம் செலுத்தும் வகையிலேயே பேக்கேஜ் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் மக்களுக்கு சுமை அதிகமாகும்.
காலப்போக்கில், கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே கேபிள் தொழிலில் நிற்கும் நிலை உருவாகி கேபிள் ஆபரேட்டர்கள், தொழிலைவிட்டே செல்லக்கூடிய நிலை உருவாகும்.
இத் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். ஆகவே, சேவை வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.