முகப்பு
மதுரை

நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்க விவசாயிகள், அலுவலர்களுடன் ஆய்வுக் குழு

நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்க விவசாயிகள், அலுவலர்களைக் கொண்ட

Updated On : 23 ஜனவரி 2019, 7:33 am IST
பகிர்:

நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்க விவசாயிகள், அலுவலர்களைக் கொண்ட ஆய்வுக் குழு அமைக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன் தெரிவித்தார்.
  மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் ச.நடராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், வேளாண் இணை இயக்குநர் குமாரவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். மேலூர் வட்டத்தில் செயல்படும் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு 30 நாள்கள் ஆகியும்  பணம் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
 குலமங்கலம் பகுதி விவசாயி திருப்பதி பேசுகையில்,  விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் போது எவ்வித தொகையும் பிடித்தம் செய்யக்கூடாது என்ற விதி இருக்கும் நிலையில்,  கொள்முதல் நிலையங்களில்  ஒவ்வொரு மூட்டைக்கும் ரூ.42 பிடித்தம் செய்யப்படுகிறது. ஏற்கெனவே, நெல்லுக்கு குறைவான தொகை கிடைக்கும் நிலையில் தேவையற்ற பிடித்தம் காரணமாக, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றார். பல்வேறு விவசாயிகளும் இதே புகாரைத் தெரிவித்தனர். முந்தைய காலங்களில் விவசாயிகளைக் கொண்ட கண்காணிப்புக் குழு இருந்தது. அதைப் போல மீண்டும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 அதையடுத்து நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்க விவசாயிகள், அலுவலர்கள் கொண்ட ஆய்வுக் குழு அமைக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் தெரிவித்தார்.
 வைகை ஆற்றில் மணல் கொள்ளை...: வைகை ஆற்றில் குருவித்துறை முதல் மேலக்கால் வரை பல இடங்களில் மணல் திருட்டு நடைபெறுகிறது. பட்டா நிலங்களில் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்றுவிட்டு, ஆற்றில் மணல் திருடி வருகின்றனர் என்று விவசாயி எம்.பி.ராமன் புகார் கூறினார். இதே கருத்தை விவசாயிகள் பலரும் ஆமோதித்தனர்.
இப் பகுதிகளில் வருவாய், பொதுப்பணி,  கனிமவளத் துறையினர் கூட்டாக ஆய்வு செய்து, மணல் திருடுவோர் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கவும், வாகனங்களைப் பறிமுதல் செய்யவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
 உசிலம்பட்டி, செல்லம்பட்டி, அழகர்கோவில், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காட்டு மாடு, பன்றி உள்ளிட்ட விலங்குகளால் பயிர்கள் சேதம் அடைகின்றன. எனவே விளை நிலங்களுக்குள் வன விலங்குகள் வராமல் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்குப் பதில் அளித்த ஆட்சியர் நடராஜன், பன்றி போன்ற விலங்குகளால் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதைத் தடுக்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை மூலமாக உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.