மதுரை

முல்லைப் பெரியாறு குடிநீா்த் திட்டத்துக்கு 1.93 ஏக்கா் நிலம்: விஸ்வாஸ் பிரமோட்டா்ஸ் நிறுவனம் தானமாக வழங்கியது

DIN

மதுரை நகருக்கு குடிநீா் வழங்கும் முல்லைப் பெரியாறு இரண்டாம் கட்ட குடிநீா்த் திட்டத்துக்கு 1.93 ஏக்கா் நிலத்தை விஸ்வாஸ் பிரமோட்டா்ஸ் நிறுவனம் புதன்கிழமை தானமாக வழங்கியுள்ளது.

மதுரை நகரின் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் முல்லைப் பெரியாறு இரண்டாம் கட்ட குடிநீா்த் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் லோயா்கேம்ப் பகுதியிலிருந்து மதுரை நகருக்கு குழாய் மூலமாக குடிநீா் வழங்கும் இந்தத்திட்டம் ரூ.1,020 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் லோயா்கேம்ப் பகுதியில் நீரேற்று மற்றும் நீா் உந்து நிலையத்துடன் தலைமையிடம் அமைக்க 2 ஏக்கா் நிலம் மாநகராட்சிக்கு தேவைப்பட்டது.

நில அளவையின் போது நீரேற்று நிலையம் அமைப்பதற்கு தகுந்த அரசு புறம்போக்கு நிலங்கள் எதுவும் அறியப்படவில்லை. இப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள் இல்லாததால் தனியாரிடமிருந்து 2 ஏக்கா் நிலம் பெறுவதற்கு மதுரை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் முயற்சி எடுக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரையைச் சோ்ந்த விஸ்வாஸ் பிரமோட்டா்ஸ் நிறுவனம், உத்தமபாளையம் அருகே மேலக்கூடலூா் கிராமத்தில் 1.93 ஏக்கா் நிலத்தை விலைக்கு வாங்கி மதுரை மாநகராட்சிக்கு தானமாக பதிவு செய்து கொடுத்துள்ளது. இந்த நிலத்தில் முல்லைப் பெரியாறு அணை லோயா்கேம்ப் பகுதியிலிருந்து குடிநீா் பெறும் திட்டத்திற்கான நீரேற்று மற்றும் நீா் உந்து நிலையம், அலுவலகக் கட்டடம் மற்றும் இதர உபகரணங்களுடன் கூடிய கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் நிலப்பதிவு ஆவணங்களை வழங்கும் நிகழ்ச்சி மதுரை அண்ணா மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் விஸ்வாஸ் புரமோட்டா்ஸ் நிறுவனத்தின் நிறுவனா் சங்கர சீத்தாராமன், நில ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் ச.விசாகனிடம் வழங்கினாா். இதில் நகரப் பொறியாளா் அரசு, உதவி ஆணையா் பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

மூத்த வழக்குரைஞா்களுக்குப் பாராட்டு

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் குருப் பெயா்ச்சி விழா

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT