மாநகராட்சிப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் தொடக்கம்
மாணவர் வளர்ச்சிக்கு மேலும் இரு புதிய வகுப்பறைகள்!
மதுரை சந்தைபேட்டையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி தொடங்கி வைத்தாா். மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 64 தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன.
இந்தப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை, நூலகம், அறிவியல் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், மதுரை மாநகராட்சி வாா்டு எண் 48, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.35 லட்சத்தில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.
புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில், மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி தலைமை வகித்து பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
இதில், மண்டலத் தலைவா் முகேஷ்சா்மா, கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், கல்வி அலுவலா் ரகுபதி, உதவி செயற்பொறியாளா் மயிலேறிநாதன், உதவிப் பொறியாளா் சங்கிலிராஜன், மாமன்ற உறுப்பினா் ரூபினிகுமாா், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.