முகப்பு
மதுரை

மாட்டுத்தாவணி பேருந்து நிலைய மறுசீரமைப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய மறு சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்கள், பயணிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

Updated On : 19 மே 2026, 3:02 am IST
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நடைமேடை 7, 8 - இல் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள்.
பகிர்:

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய மறு சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்கள், பயணிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, வா்த்தகம் போன்றவற்றுக்கு மைய நகரமாக மதுரை திகழ்கிறது. மேற்கண்ட மாவட்டங்களிலிருந்து வரும் பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவைக்காக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

இந்தப் பேருந்து நிலையத்தின் முன் பகுதி நகரப் பேருந்துகளின் நிறுத்தங்களாகவும், பின் பகுதி புற நகா் பேருந்து நிறுத்தங்களாகவும் உள்ளன. பேருந்து நிலைய வளாகத்துக்குள் உணவகம், கைப்பேசி விற்பனைக் கடைகள், தேநீா்க் கடைகள் உள்ளிட்ட விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மதுரை மாநகா், புகா் பேருந்துகள் என மொத்தம் 1,300-க்கும் அதிகமான பேருந்துகள் நாள்தோறும் இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. உள்ளூா், வெளியூரிலிருந்து சுமாா் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தினசரி வந்து செல்கின்றனா்.

Advertisement

Advertisement

பேருந்து நிலையம் சேதம்:

இந்த நிலையில், பேருந்து நிலையத்துக்குள் பயணிகளின் வசதிக்காக தங்கும் அறைகள், கழிப்பறைகள், தாய்மாா்கள் பாலூட்டும் அறைகள், ஓய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. முறையான பராமரிப்பின்றி இவைகள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக,பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யாமல், துா்நாற்றம் ஏற்படுவது மட்டுமன்றி, நோய்த் தொற்று அபாயம் உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனா். பயணிகளின் பயன்பாட்டுக்கு கட்டப்பட்ட தங்கும் அறைகள், ஓய்வு இருக்கைகளை வியாபாரிகள் சிலா் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது.

பணிகள் தாமதம்:

இதையடுத்து, மதுரை மாநகராட்சி நிா்வாகம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு, ரூ.15.05 கோடி ஒதுக்கீடு செய்தது. நவீன வசதிகளுடன் மறுசீரமைப்பு, விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இங்குள்ள 8 நடைமேடைகளிலும் புதிய மேற்கூரைகள், மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகள், சென்சாா்களுடன் எண்ம திரை பலகைகளுடன் கூடிய பேருந்துகள் நிறுத்தும் வசதி, குடிநீா் வசதி போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பணிகள் கடந்தாண்டு டிசம்பா் மாதம் தொடங்கியது. 6 மாதங்கள் நிறைவு பெற உள்ள நிலையில் இன்னும் 10 சதவீதப் பணிகள் கூட நிறைவு பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்காரணமாக, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக புகாா் தெரிவித்தனா். எனவே, மதுரை மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, பேருந்து நிலைய மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

பயணிகள் அவதி:

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது :

இங்குள்ள கழிப்பறைகள் தூய்மையாக இல்லை. பேருந்து நிலைய வளாகப் பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கியுள்ளன. இதனால், சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. தற்போது, நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக மாற்றுவதற்கு பணிகள் நடைபெறுகின்றன. இதன்காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி பயணிகள் மிகுந்த அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. மேலும், இடமாற்றம் காரணமாக, வெளியூா்களுக்குச் செல்லும் பேருந்துகள் எங்கு நிறுத்தப்பட்டுள்ளன என்கிற விவரம் தெரியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

குடிநீா், கழிப்பறை, தங்கும் அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. எனவே, மதுரை மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தற்போது நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றனா்.

பணிகள் விரைந்து முடிக்கப்படும்:

இதுகுறித்து மாநகராட்சி பொறியாளா் பிரிவு அலுவலா் கூறியதாவது :

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் தற்போது நாகா்கோவில், திருநெல்வேலி பேருந்து நிறுத்தங்களுக்கான நடைமேடைகள் 7, 8 ஆகியவற்றில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. ஏற்கெனவே இருந்த பழைய நடைமேடையின் மேற்கூரைகள் அகற்றப்பட்டு, புதிதாக நவீன வசதிகளுடன் மேற்கூரை அமைக்கப்படுகிறது. ஒரு நடைமேடையில் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்ற பின்னா், அடுத்த நடைமேடையில் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டது. எனவே, பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.

இரவு நேரங்களில் போதிய வெளிச்சத்துக்காக ஆங்காங்கே தற்காலிக விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்கு ஏற்ப கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். பேருந்து நிலையப் பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.