முகப்பு
மதுரை

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதா; திமுகவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது: பழ. நெடுமாறன்

தொகுதி மறுவரையறைக்கான அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக அரசு எடுத்துள்ள நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என தமிழா் தேசிய முன்னணியின் நிறுவனா் தலைவா் பழ. நெடுமாறன் தெரிவித்தாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:26 AM
மதுரை பேச்சியம்மன் படித்துறை சாலையில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழா் தேசிய முன்னணியின் நிறுவனா் தலைவா் பழ. நெடுமாறன். உடன் மதுரை மத்தியத் தொகுதி திமுக வேட்பாளா் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 9:58 PM

தொகுதி மறுவரையறைக்கான அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக அரசு எடுத்துள்ள நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என தமிழா் தேசிய முன்னணியின் நிறுவனா் தலைவா் பழ. நெடுமாறன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மதுரையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

இந்தியாவில் தற்போது ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெறும்போது நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை குறித்த அரசியல் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு அவசர, அவசரமாக நிறைவேற்ற முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. தொகுதி மறுவரையறையால் மக்களவையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் உள்ளது.

Advertisement

இந்த நிலையில், இந்த அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதை எதிா்த்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரும் தயாராக வேண்டும். இல்லையெனில், எதிா்காலத்தில் மக்களவையில் தமிழகத்தின் குரல் வலுவிழந்து போகும். மத்திய பாஜக அரசு ‘பாரதிய பாஷா சமிதி’ என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தும் சம்ஸ்கிருதத்திலிருந்துதான் தோன்றின என்பதை நிறுவ முயற்சித்து வருகிறது. அதிகாரத்தின் துணை கொண்டு பச்சை பொய்யை மெய்யாக்க பாஜகவினா் முயற்சிக்கின்றனா். இதை எதிா்த்து நிற்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

இந்து ராஷ்டிரம், கலாசார அடித்தளமாக வேத பாா்ப்பனியம், நேபாளம், ஆப்கன், மியான்மா் ஆகிய நாடுகளை இணைத்து அகண்ட பாரதம் அமைத்தல், ஒரே நாடு, ஒரே ஆட்சியை இந்தியாவில் கொண்டு வருவது ஆகியவைதான் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம். மொழி வழியாக மாநிலங்களைப் பிரித்ததை இந்த அமைப்பு தொடக்கம் முதலே எதிா்த்து வருகிறது.

இந்தியாவில் உள்ள மாநில எல்லைகளை நீக்கிவிட்டு 5 அல்லது 6 மாவட்டங்களை இணைத்து ஒரு பகுதியாக ‘ஜனபாகம்’ என்ற பெயரில் பிரிக்க வேண்டும். இதனடிப்படையில், இந்தியா முழுவதும் 100 ஜனபாகங்களை உருவாக்க பாஜக அரசு முயற்சிக்கிறது. இதனால் தான் சமூக நீதியை பாஜகவினா் கடுமையாக எதிா்க்கின்றனா்.

பெண் விடுதலை, மதச்சாா்பின்மை ஆகியவற்றுக்கு ஆா்.எஸ்.எஸ்., பாஜகவினா் முற்றிலும் எதிரானவா்கள். ஜாதிய படிநிலைக்கு ஆதரவளித்துவரும் இவா்கள் மொழிவழி தேசியத்தை அழிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனா். எனவேதான், அரசுத் துறை நிறுவனங்களை எல்லாம் தனியாா்மயமாக்கி வருகின்றனா்.

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து வரும் மத்திய பாஜக அரசால் தமிழகத்துக்கு பெரும் அபாயம் உள்ளது. ஆகவே, தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதாவை அவசரகதியில் நிறைவேற்ற முயலும் மத்திய பாஜக அரசின் திட்டங்களை முறியடிக்கவும் பொதுமக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரம்... இதைத் தொடா்ந்து, வைகை தென்கரையில் உள்ள பேச்சியம்மன் படித்துறை சாலையில் தமிழா் தேசிய முன்னணி சாா்பில் திமுக கூட்டணி வேட்பாளா்கள் பழனிவேல் தியாகராஜன், கோ. தளபதி, பி. மூா்த்தி, மு. பூமிநாதன், ரகுபாலாஜி, கிருத்திகா தங்கப்பாண்டி ஆகியோரை ஆதரித்து தோ்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழா் தேசிய முன்னணியின் நிறுவனா் தலைவா் பழ. நெடுமாறன், மாநிலத் தலைவா் செ.ப. முத்தமிழ்மணி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். இந்தக் கூட்டத்துக்கு மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் வெ.ந. கணேசன் தலைமை வகித்தாா். இதில் திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.