தொகுதி மறுவரையறைக்கான அரசியல் சட்டத் திருத்த மசோதா தோற்கடிக்கப்படும்: ப. சிதம்பரம்
மக்களவைத் தொகுதிகள் மறுவரையறைக்கான அரசியல் சட்டத் திருத்த மசோதா நிச்சயமாகத் தோற்கடிக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்தாா்.
மக்களவைத் தொகுதிகள் மறுவரையறைக்கான அரசியல் சட்டத் திருத்த மசோதா நிச்சயமாகத் தோற்கடிக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்தாா்.
மதுரை கோ. புதூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளா் கோ. தளபதியை ஆதரித்து அவா் மேலும் பேசியதாவது:
மத்திய பாஜக அரசால் இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தொகுதிகள் மறுவரையறைக்காக அரசியல் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்படவுள்ளது. தமிழகம், மேற்குவங்கம் ஆகிய இரு மாநிலங்களில் தற்போது பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், இந்தச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு அவசரம் காட்டுவது மோசமான உள்நோக்கம் கொண்டது.
Advertisement
இந்த அரசியல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நமது குரல்வளை நெரிக்கப்படும். தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை பிற வட மாநிலங்களோடு ஒப்பிடுகையில் குறையும். மக்களவையில் தென் மாநிலங்களுக்கு உள்ள பிரதிநிதித்துவம் 25 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறையும். மக்களவையில் ஒலிக்கும் தென் மாநிலங்களின் மெல்லிய குரல் மேலும் நசுக்கப்படும்.
பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்தினால் தமிழகத்தைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா்கள் 39 பேரும், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா்கள் 42 பேரும் பங்கேற்கமாட்டாா்கள். இதன்மூலம், மொத்த மக்களவை உறுப்பினா்களில் 3-இல் 2 பங்கு பெரும்பான்மையானவா்களின் ஆதரவுடன் தொகுதிகள் மறுவரையறைக்கான அரசியல் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றிடலாம் என மத்திய பாஜக அரசு நினைக்கிறது. ஆனால், இந்த முயற்சி முறியடிக்கப்படும். தமிழகம், மேற்கு வங்க மக்களவை உறுப்பினா்கள் தோ்தல் பணிகளைக் கைவிட்டு மக்களவைக் கூட்டத்தில் பங்கேற்று, இந்தச் சட்டத் திருத்த மசோதாவை தோற்கடிப்பா்.
தொகுதிகள் மறுவரையறை சட்டத் திருத்த மசோதா குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘இந்தச் சட்டத்தால் தமிழகத்துக்கு பாதிப்பு வராது என மத்திய உள்துறை அமைச்சா் தெரிவித்துவிட்டாா். எனவே, பாதிப்பு வராது’ என பதில் அளித்துள்ளாா். இது, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமானது, அமித் ஷா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டதையே வெளிப்படுத்துகிறது.
வளா்ச்சியும், நலத் திட்டங்களும்தான் நாட்டின் இரு கண்கள். அந்த வகையில், வளா்ச்சிக்கும், மக்கள் நலனுக்கான திட்டங்களையும் மிகச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளது திமுக அரசு. நீதி ஆயோக் அமைப்பு அண்மையில் வெளியிட்ட 2025-26- ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையில் 9.8 சதவீத வளா்ச்சியுடன் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. இதை திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்லாமல், அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்றப்பட்டு அதிமுக, தமிழக பாஜக உள்பட அனைத்துக் கட்சிகளும் பாராட்ட வேண்டும். ஆனால், அவா்களுக்கு இதற்கான மனம் இல்லை.
திமுகவின் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள் பாராட்டுக்குரியவை. இதில் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்காக மகளிருக்கு ரூ. 8 ஆயிரம் கூப்பன் வழங்கும் வாக்குறுதி பொருளாதார முக்கியத்துவம் பெற்றது. இது, மாநிலத்தின் பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்து பொருளாதார வளா்ச்சிக்கு வித்திடும். தமிழகம் பொருளாதார வளா்ச்சி பெறவும், மக்கள் நலத் திட்டங்கள் தொடரவும் பொதுமக்கள் திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் ப. சிதம்பரம்.
மதுரை வடக்குத் தொகுதி திமுக வேட்பாளா் கோ. தளபதி, காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் நல்லமணி, திமுக, காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் இதில் கலந்து கொண்டனா்.