முகப்பு
மதுரை

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்பறைகள், ஆய்வகங்கள், மாணவா்கள் விடுதி உள்ளிட்ட கட்டடப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்தன.

Updated On : 8 ஜூலை 2026, 4:22 am IST
மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டடங்கள்.
பகிர்:

திருப்பரங்குன்றம், ஜூலை 7: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்பறைகள், ஆய்வகங்கள், மாணவா்கள் விடுதி உள்ளிட்ட கட்டடப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்தன. இதையடுத்து, இந்தக் கல்லூரி வளாகம் வருகிற ஆகஸ்ட் மாத இறுதியில் திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எஞ்சியுள்ள கட்டுமானப் பணிகள் இரவு, பகலாகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன,.

மதுரை தோப்பூரை அடுத்த கோ.புதுப்பட்டியில் 220 ஏக்கா் பரப்பளவில், ரூ.2,021.51 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, விடுதிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் கடந்த 2024-ஆம் ஆண்டு, மே 22-ஆம் தேதி இதற்கான பணிகள் தொடங்கின. ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளையும் 33 மாதங்களில், அதாவது அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மருத்துவக் கல்லூரி, விடுதி வளாகம், ஆய்வகங்கள், வெளிநோயாளிகள் பிரிவு கட்டடங்களும், இரண்டாம் கட்டமாக உள்நோயாளிகளுக்கான முதன்மை மருத்துவமனைக் கட்டடங்களும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்த வளாகத்தில் மருத்துவமனை, கல்லூரி, விடுதி, கூட்ட அரங்கம் என மொத்தம் 24 கட்டடங்கள் தனித்தனியாகக் கட்டப்பட்டு வருகின்றன. முதல் கட்டப் பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் இரவு, பகலாகப் பணியாற்றி வருகின்றனா்.

உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப நீடித்த நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு இந்தக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோயாளிகளுக்கான அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கியதாக இந்த வளாகம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

900 படுக்கை வசதிகளுடன் கூடிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கென தனியாக 150 படுக்கைகள் ஒதுக்கப்படும்.

தற்போது முதல் கட்டப் பணிகளான மருத்துவக் கல்லூரி, விடுதி, குடியிருப்புகள், விளையாட்டுத் திடல், 750 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ராமநாதபுரத்தில் பயின்று வந்த எய்ம்ஸ் கல்லூரியின் 4-ஆம் ஆண்டு மாணவா்கள், மதுரை தோப்பூா் வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட விடுதிக் கட்டடத்தில் தங்க அனுமதிக்கப்பட்டனா். இங்கிருந்தவாறு அவா்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவப் பயிற்சி பெற்று வந்தனா்.

தற்போது மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து திரும்பும்போது, அவா்கள் நேரடியாக மதுரையில் உள்ள புதிய எய்ம்ஸ் வளாகத்திலேயே பயிலும் வாய்ப்பைப் பெறவுள்ளனா். தற்போது கல்லூரி, விடுதிக் கட்டடப் பணிகள் 90 சதவீதம் முடிந்து மீதமுள்ள பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இறுதியில் அல்லது செப்டம்பா் முதல் வாரத்தில் மருத்துவக் கல்லூரி வகுப்புகள் இந்த வளாகத்தில் முழுமையாகத் தொடங்கப்பட உள்ளன. இதற்கேற்ப அடுத்த மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகம் அதிகாரப்பூா்வமாகத் திறக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments