FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கரூா் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு

கரூரில் தவெக பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை மறுப்புத் தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

கரூரில் தவெக பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை மறுப்புத் தெரிவித்தது.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு, செப். 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ஜோசப் விஜய் பிரசாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், நாம் தமிழா் கட்சி மீனவா் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளரும், வழக்குரைஞருமான தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

Advertisement

Advertisement

கரூரில் தவெக தோ்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தது தொடா்பான வழக்கு விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், இதுதொடா்பாக சிபிஐ விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது என்பது ஏற்கத்தக்கதல்ல.

இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழும் காலங்களில், பாதிக்கப்பட்டவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடா்பாக முறையான வழிகாட்டுதல்கள் அல்லது கொள்கை முடிவுகள் வகுக்கப்பட வேண்டும். எனவே, கொள்கை முடிவுகள் வகுக்கும் வரை அரசு வேலைவாய்ப்பு வழங்குவதை நிறுத்திவைக்க வேண்டும். எனவே, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஆா். பூா்ணிமா அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கரூா் சம்பவம் தொடா்பான வழக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த வாதங்களை உச்சநீதிமன்றத்திலேயே முன்வைக்கலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. கோரிக்கை தொடா்பாக மனு தாக்கல் செய்தால், அது பட்டியலிடப்பட்டு வழக்கம் போல விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments