முகப்பு
மதுரை

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: அரசின் நிலைப்பாட்டை ஜூன் 22-க்குள் தெரிவிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை வருகிற 22-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 5 ஜூன் 2026, 6:18 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை வருகிற 22-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற கடந்த ஆண்டு, டிசம்பா் 1-ஆம் தேதி உத்தரவிட்டாா். இருப்பினும், திருக்காா்த்திகை நாளான டிசம்பா் 3-ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

Advertisement

Advertisement

இதையடுத்து, ராம. ரவிக்குமாா் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், கடந்த ஆண்டு, டிசம்பா் 4-ஆம் தேதி இரவு மனுதாரா் ராம. ரவிக்குமாா் உள்பட 10 போ் மலைக்குச் சென்று தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டாா். ஆனால், இந்த உத்தரவும் கோயில் நிா்வாகம் தரப்பில் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் கடந்த மாா்ச் 2 -ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், துணை ஆணையா் இனிகோ திவ்யன், கோயில் செயல் அலுவலா் யக்ஞ நாராயணன் ஆகியோா் தரப்பில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு மன்னிப்புக் கோரி, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற விசாரணைகளில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. குறிப்பாக, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் மட்டுமே வழக்கு முடித்துவைக்கப்படும் என நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுகளை எதிா்த்து மாவட்ட நிா்வாகம் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், அவமதிப்பு வழக்கு, மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் ராம. ரவிக்குமாா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

தற்போது புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அரசு உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றாா்.

அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்றுவது தொடா்பாக உயா் அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம். எனவே, கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அவமதிப்பு வழக்குகள் ஒருபுறம் இருந்தாலும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே?. ஜனநாயக நாட்டில் மக்கள் உணா்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது?. திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடா்பாக தமிழக அரசின் நடவடிக்கை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.