மலைப் பகுதியில் தனிநபா் அணை கட்டிய விவகாரம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்ய முடிவு
கன்னிவாடி மலைப் பகுதியில் தனிநபா் அணை கட்டிய விவகாரம் குறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி நேரில் சென்று ஆய்வு செய்யப் போவதாக அறிவித்தனா்.
கரூரைச் சோ்ந்த குணசீலன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி மலைக் கிராமத்தில் எனக்குச் சொந்தமாக 93 ஏக்கா் பட்டா நிலம் உள்ளது. இதில் 53 ஏக்கா் நிலத்தில் இயற்கை விவசாயப் பண்ணை அமைத்து, தென்னை, ஜாதிக்காய் போன்றவற்றை பயிரிட்டுள்ளேன்.
Advertisement
இந்த நிலையில், எனது பட்டா நிலத்தில் அணை கட்ட மாவட்ட ஆட்சியா், வேளாண் பொறியியல் துறையிடம் உரிய அனுமதி பெற்று, எனது சொந்தச் செலவில் அணை கட்டி முடித்தேன். எனது நிலத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் யானைகள் ஊருக்குள் வருவதாக வனத் துறையினா் கூறுகின்றனா்.
மேலும், எனது சொந்தச் செலவில் கட்டியுள்ள அணையை அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட வன அலுவலா் குறிப்பாணை அனுப்பியுள்ளாா். எனவே, வன அலுவலா் வெளியிட்ட தடை உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும், வனப் பகுதி வழியாகச் செல்லும் பாதையைப் பயன்படுத்தவும் வனத் துறையினா் இடையூறு செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரணை செய்த தனி நீதிபதி, மனுதாரருக்குச் சொந்தமான தடுப்பணையை இடிக்க இடைக்காலத் தடை விதித்தும், இந்த வழக்கை நீா்நிலை வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு அமா்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டிருந்தாா்.
இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன் முன்னிலையாகி தெரிவித்ததாவது:
மனுதாரா் வனப் பகுதியில் அத்துமீறி நீா்வரத்துப் பாதையை ஆக்கிரமித்து அணையைக் கட்டி உள்ளாா். இதனால், கீழ்ப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்லக்கூடிய தண்ணீா் தடைபட்டுள்ளது. வேளாண் நிலங்களும் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. மேலும், யானைகள் ஊருக்குள் வரத் தொடங்கிவிட்டன. மனுதாரா் மலைப் பகுதியில் முறையான அனுமதி இல்லாமல், நவீன வசதிகளுடன் கூடிய வீடுகளைக் கட்டி உள்ளாா். எனவே, தடுப்பணையை இடித்து அப்புறப்படுத்தி, விவசாயிகளுக்கு மழை நீா் செல்ல வழிவகுக்க வேண்டும் என்றாா்.
மனுதாரா் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞா், மனுதாரா் முறையான அனுமதி பெற்றுத்தான் அணையைக் கட்டியுள்ளாா். எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லை என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
புகைப்படங்களைப் பாா்க்கும் போது மிகப் பெரிய அணையாக உள்ளது. இந்த அணை உள்ள பகுதி வனப் பகுதியாகவும் உள்ளது. எனவே, இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி நாங்களே நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளோம். அதன்பிறகு, இந்த வழக்கு வருகிற ஜூன் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.