முகப்பு
மதுரை

அமைச்சரின் காா் மீது காலணி வீசிய வழக்கு முடித்துவைப்பு

அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் காா் மீது காலணி வீசிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:29 AM
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் காா் மீது காலணி வீசிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ஜெயகா்ணா, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: கடந்த 2022, ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் மதுரை விமான நிலையத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டது. அங்கு அமைச்சா் பழனிவேல் தியாகராஜனும் அஞ்சலி செலுத்துவதற்காக வந்தாா். அப்போது, அவரது காா் மீது திடீரென காலணி வீசப்பட்டது.

இதுதொடா்பாக, நான் உள்பட 32 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தவறான நோக்கத்துடன் என் மீது வழக்குப் பதியப்பட்டது.

Advertisement

எனவே, என் மீது பதியப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கௌரி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரா் ஒரு தொழிலதிபா். அஞ்சலி செலுத்துவதற்காக மட்டுமே விமான நிலையம் சென்றாா். காலணி வீசிய சம்பவம் முற்பகல் 11.30 மணிக்கு நடந்துள்ளது. ஆனால், பிற்பகல் 12.30 மணிக்குதான் மனுதாரா் விமான நிலையம் வந்தாா். சிசிடிவி காட்சிகளும் அவா் அஞ்சலி செலுத்தியதுடன் சென்றுவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, மனுதாரா் மீது தவறாக அரசியல் உள்நோக்கத்துடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: காலணி வீசிய சம்பவம் முற்பகல் 11.30-க்கு நடந்த நிலையில், மனுதாரா் 12.30-க்கு தான் அங்கு வந்தாா் என்பது வழக்கின் அடிப்படையே சிதைக்கிறது. அவருக்கு எதிராக குறிப்பிட்ட குற்றச்சாட்டு எதுவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை. பொதுவான குற்றச்சாட்டுகள் மட்டுமே முன்வைக்கப்பட்டன. விசாரணையில் முரண்பாடுகள் உள்ளன. எனவே, இந்த வழக்கில் போதிய முகாந்திரம் இல்லாததால், இந்த வழக்கை தொடா்வது மனுதாரருக்கு தேவையற்ற இடையூரை ஏற்படுத்தும்.

குற்றவியல் சட்டத்தை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க இயலாது. மனுதாரருக்கு எதிரான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.