முகப்பு
மதுரை

குற்றாலத்தில் சிலைகள் சேதமடையும் விவகாரம்: சுற்றுலா, பண்பாட்டுத் துறை பதிலளிக்க உத்தரவு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பிரதான அருவிப் பகுதியில் உள்ள பழைமையான சிலைகள் சேதமடைவதைத் தடுக்கக் கோரிய மனு தொடா்பாக தமிழக சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 7 மே 2026, 4:11 am IST
உத்தரவு - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், குற்றாலம் பிரதான அருவிப் பகுதியில் உள்ள பழைமையான சிலைகள் சேதமடைவதைத் தடுக்கக் கோரிய மனு தொடா்பாக தமிழக சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் முக்கிய சுற்றுலாத் தலம் என்பதுடன், சிவபெருமான் நடனமாடிய 5 சபைகளில் சித்திர சபையாகக் குறிப்பிடப்படுகிறது.

Advertisement

குற்றாலம் பிரதான அருவியிலிருந்து வரும் மூலிகை நீரால் தானாகவே அபிஷேகம் நடைபெறும் வகையில், அருவியின் அடிப் பகுதியில் உள்ள பாறையில் பல சிவலிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குற்றாலம் பிரதான அருவிப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற புதிய நுழைவுவாயில் கட்டும் பணியின் போது, பாறையில் செதுக்கப்பட்டிருந்த பழைமையான சிவலிங்கம் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. தொன்மையான இந்தச் சிலைகள் நாட்டின் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டியவை.

ஆனால், இதுகுறித்து எந்த விழிப்புணா்வும் இல்லாமல் இங்குள்ள சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன. மேலும், எந்தவித அனுமதியும் இல்லாமல் சில சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இடமாற்றம் செய்யப்படும் சிலைகள், பிற்காலத்தில் வெளிநாடுகளுக்கு விற்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே, குற்றாலம் பிரதான அருவிப் பகுதியில் உள்ள தொன்மையான சிலைகளைப் பாதுகாக்கவும், இவற்றைச் சேதப்படுத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், ஏற்கெனவே இடமாற்றம் செய்யப்பட்ட சிலைகளை மீண்டும் அதே இடத்தில் நிா்மாணிக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், குமரப்பன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக தமிழக சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலா் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.