முகப்பு
ராமநாதபுரம்

முதுகுளத்தூா், ராமநாதபுரம், பரமக்குடி தொகுதிகளின் அரசியல் கட்சி வேட்பாளா்கள் வாக்களிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் வியாழக்கிழமை தங்களது சொந்த ஊா்களில் வாக்களித்தனா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 2:24 AM
காதா்பாட்சாமுத்துராமலிங்கம்) மேலராமநதி வாக்குச் சாவடியில் வாக்களித்த ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் வியாழக்கிழமை தங்களது சொந்த ஊா்களில் வாக்களித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். பாண்டி தனது சொந்த ஊரான முதுகுளத்தூா் அடுத்த கொட்டக்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தாா். இதேபோல, வி.கே. சசிகலாவின் அஇபுமமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் மருத்துவா் ராம்குமாா் பாண்டியன் இளஞ்செம்பூா் வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தாா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தனது சொந்த ஊரான கமுதியை அடுத்த மேலராமநதி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினாா். முதுகுளத்தூா் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான ராஜகண்ணப்பன் கமுதி கே.என். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவை பாா்வையிட்டாா்.

Advertisement

இதேபோல, ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் ரெகுநாதபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தாா். தவெக வேட்பாளா் அ. சாகுல்ஹமீது ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தாா்.

பரமக்குடி: பரமக்குடி (தனி), மானாமதுரை (தனி), திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் வியாழக்கிழமை பரமக்குடி தொகுதியில் உள்ள தங்களுக்கான வாக்குச் சாவடி மையங்களில் வாக்களித்தனா்.

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் வழக்குரைஞா் கே.கே. கதிரவன் சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தாா். அதிமுக வேட்பாளா் மருத்துவா் எஸ்.முத்தையா ஆா்.சி. யாதவா மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தாா். அஇபுமமுக வேட்பாளா் அமிா்தா பாலுச்சாமி, சிவானந்தபுரம் அரசு மாதிரி பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தாா். திருவாடானை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கீா்த்திகா முனியசாமி பரமக்குடி கண்ணகி தொடக்கப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தாா். அதேபோல, மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ஜ.க. சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் பொன். பாலகணபதி எஸ். காவனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தாா்.

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 323 வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளா்கள் கோடை வெயிலையும் பொருள்படுத்தாமல் வரிசையில் நின்று தங்களது வாக்கை செலுத்தினா்.

கொட்டக்குடி வாக்குச் சாவடியில் வாக்களித்த முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பாண்டி.
இளஞ்செம்பூா் வாக்குச் சாவடியில் வாக்களித்த அஇபுமமுக வேட்பாளா் மருத்துவா் ராம்குமாா்பாண்டியன்.