ஆண்டிபட்டி அருகே மூல வைகை ஆற்றில் உறை கிணறுகள் அமைத்து தண்ணீர் திருட்டு: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக புகார்
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மூல வைகை ஆற்றில் பல இடங்களில் உறை கிணறுகள் அமைத்து விவசாயத்திற்காக
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மூல வைகை ஆற்றில் பல இடங்களில் உறை கிணறுகள் அமைத்து விவசாயத்திற்காக தண்ணீர் திருடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிக்கு உள்பட்டகிராம மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கியமான நீர்ஆதாரமாக மூல வைகை ஆறு விளங்குகிறது.
வருஷநாடு வனப்பகுதியில் உற்பத்தியாகும் மூல வைகை ஆறு குன்னூர் அருகே வைகை ஆற்றில் வந்து கலக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் வழக்கத்தை விட மிகவும் குறைவான அளவு மழை பெய்ததால் ஆண்டின் பல மாதங்கள் மூல வைகை ஆறு வறண்டு மணல்மேடாகக் காட்சியளிக்கிறது.
மக்களுக்கு குடிநீர் வழங்கும் விதமாக அரசின் சார்பில் ஆற்றில் ஆங்காங்கே உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர விவசாயத்திற்கோ மற்ற பயன்பாட்டிற்கோ தண்ணீர் எடுக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது வருஷநாடு வனப்பகுதியில்
பெய்து வரும் கனமழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படும் நிலையில், சட்டவிரோதமாக கடமலை-மயிலை ஒன்றிய பகுதிகளில் பல இடங்களில் தனிநபர்கள் வைகை ஆற்றில் உறைகிணறுகள் அமைத்து மின்
மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் குடிநீருக்கான உறைகிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது என்றும், மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பெயரளவில் மட்டும் அதிகாரிகள் சோதனை நடத்துவதாக அவர்கள் குறை கூறுகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக தடுக்காவிட்டால் இனிவரும் காலங்களில் குடிநீர் பற்றாக்குறை அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே சட்டவிரோதமாக ஆற்றில் உறைகிணறுகள் அமைத்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.